விமான கண்காட்சிக்கு 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் பேட்டி
பெங்களூரு எலகங்காவில் நடைபெற உள்ள விமான கண்காட்சிக்கு 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் கமிஷனர் சுனில்குமார் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் கடந்த 14-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் துணை ராணுவப்படையை சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இதன் காரணமாக பெங்களூரு எலகங்காவில் நடைபெற உள்ள சர்வதேச விமான கண்காட்சிக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
3 ஆயிரம் போலீசார்
பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி வருகிற 20-ந் தேதி(அதாவது நாளை) முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. விமான கண்காட்சிக்கு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளை சேர்ந்த தொழில்அதிபர்கள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானவர்கள் வருவார்கள். இதனால் விமான கண்காட்சி நடைபெறும் 5 நாட்களிலும் எலகங்கா விமான நிலையம், அதை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பெங்களூரு நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எலகங்கா விமான நிலைய பகுதியில் மட்டும் பாதுகாப்பு பணியில் 7 துணை போலீஸ் கமிஷனர்கள், 20 உதவி போலீஸ் கமிஷனர்கள், 90 இன்ஸ்பெக்டர்கள், 161 சப்-இன்ஸ்பெக்டர்கள், 1,900 போலீஸ்காரர்கள், 11 பிளட்டூன் கர்நாடக ஆயுதப்படை போலீசார், 5 பிளட்டூன் நகர ஆயுதப்படை போலீசார் உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர். பெங்களூரு போலீசாருடன் சேர்ந்து கருடா படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். எலகங்கா விமான நிலையம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
விமான கண்காட்சியை காணவருபவர்கள் முழுமையாக பரிசோதனை செய்த பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக 12 இடங்களில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு இருக்கிறது. விமான நிலையத்தை சுற்றி சந்தேகப்படும் படியாக யாரும் சுற்றினால், அவர்களை பிடித்து விசாரணை நடத்தப்படும். விமான நிலையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வெடிகுண்டு நிபுணர்களால் தொடர்ந்து சோதனை நடத்தப்படும். கண்காட்சி நடைபெறும் 5 நாட்களும் பெங்களூரு நகரில் ஆளில்லாத விமானங்கள், பலூன்கள், சிறு விமானங்கள் ஆகியவற்றை பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை சுற்றி 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன்மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படும். கண்காட்சி நடைபெறும் நாட்களில் பெங்களூருவுக்கு புதிதாக வருபவர்கள், ஓட்டலில் தங்கி இருப்பவர்களின் விவரங்களும் சேகரிக்கப்படும். கண்காட்சி நடைபெறும் 5 நாட்களிலும் எலகங்கா விமான நிலைய பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம், வாகனங்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. .
இவ்வாறு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் கூறினார்.
Related Tags :
Next Story