பாரில் புகுந்து மது பாட்டில்களை உடைத்த சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீடியோ பரவுகிறது
அதிகாலை 3 மணி வரை திறந்திருந்த மதுபான பாரில் புகுந்த சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கு இருந்த மதுபாட்டில்களை உடைத்து தள்ளும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
அம்பர்நாத்,
தானே மாவட்டம் டோம்பிவிலியில் சந்து பேலஸ் என்ற மதுபான பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் சம்பவத்தன்று டோம்பிவிலி போலீஸ்நிலைய சீனியர் இன்ஸ்பெக்டர் விஜய்சிங் பவார் சென்று உள்ளார். அவர் விதிகளை மீறி நள்ளிரவு வரை பாரை திறந்து வைத்ததாக அங்கு இருந்த ஊழியர்களை திட்டி உள்ளார். மேலும் அங்கு இருந்த மதுபான பாட்டில்களை உடைத்து இருக்கிறார்.
இந்த காட்சிகள் மதுபான பாரில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
லஞ்சப்புகார்
இந்தநிலையில் மதுபான பார் உரிமையாளர் மாதவி போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த புகாரில், சீனியர் இன்ஸ்பெக்டர் விஜய்சிங் பவார் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டார். அதை கொடுக்கவில்லை என்பதால் என்னை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் அவர் பாருக்குள் அத்துமீறி புகுந்து மதுபாட்டில்களை உடைத்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை சீனியா் இன்ஸ்பெக்டர் விஜய் சிங் பவார் மறுத்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘சம்பவத்தன்று மதுபான பார் விதிகளை மீறி அதிகாலை 3 மணி வரை செயல்பட்டு கொண்டு இருந்தது. எனவே அங்கு சென்று நடவடிக்கை எடுத்தேன். மதுபாட்டில்களை உடைத்தது தவறுதான்’’ என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
Related Tags :
Next Story