வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றும் பணி கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றும் பணி கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 19 Feb 2019 4:00 AM IST (Updated: 19 Feb 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் நிதிஉதவி பெறுவதற்காக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை கண்காணிப்பு அலுவலர் கிரண்குரல்லா, நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

நெல்லை,

தமிழகம் முழுவமும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிறப்பு நிதி உதவியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் சிறப்பு நிதி உதவி திட்டத்தில் ரூ.2 ஆயிரம் பெறுவதற்காக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பணியை திட்ட கண்காணிப்பு அலுவலர் கிரண்குரல்லா, நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அவர்கள், நெல்லை மாநகராட்சி, சங்கர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து கண்காணிப்பு அலுவலர் கிரண்குரல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் வறுமைக்கோர்ட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. நெல்லை மாநகராட்சி பகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் கணக்கிடப்பட்டு உள்ளது. அவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் தகுதியானவர்கள் தானா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நெல்லை மாநகராட்சி பகுதியில் 55 பேர் கம்ப்யூட்டரில் பதிவேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்திஅன்ன யோஜனா திட்டத்தில் உள்ளவர்களின் பெயர்களையும் இந்த திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, நெல்லை உதவி கலெக்டர் மணீஷ் நாரணவரே, மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர், மகளிர் திட்ட அலுவலர் மைக்கேல் அந்தோணி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story