மர்மநபர் வீசிய மிளகாய் பொடியால் கண் எரிச்சலை தாங்கி கொண்டு மின்சார ரெயிலை இயக்கிய மோட்டார்மேன் 18 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்றார்


மர்மநபர் வீசிய மிளகாய் பொடியால் கண் எரிச்சலை தாங்கி கொண்டு மின்சார ரெயிலை இயக்கிய மோட்டார்மேன் 18 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்றார்
x
தினத்தந்தி 19 Feb 2019 3:31 AM IST (Updated: 19 Feb 2019 3:31 AM IST)
t-max-icont-min-icon

மர்மநபர் வீசிய மிளகாய் பொடி கண்ணில் விழுந்த எரிச்சலை தாங்கிக்கொண்டு மோட்டார்மேன் ஒருவர் 18 கி.மீ. தூரத்துக்கு மின்சார ரெயிலை இயக்கியது தெரியவந்துள்ளது.

மும்பை,

மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து சம்பவத்தன்று மாலை டிட்வாலா நோக்கி மின்சார ரெயில் சென்றது. இந்த ரெயிலை மோட்டார் மேன் லட்சுமண் சிங்(வயது48) இயக்கினார். ரெயில் கல்வா ரெயில் நிலையத்தை கடந்து சென்றபோது, தண்டவாளத்திற்கு அருகே மர்ம ஆசாமி ஒருவர் வீசிய மிளகாய் பொடி லட்சுமண் சிங்கின் கண்ணில் பட்டது. இதனால் அவரின் கண்ணில் பயங்கர எரிச்சல் ஏற்பட்டது. மேற்கொண்டு ரெயிலை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனாலும் இதை பொருட்படுத்தாத அவர் எரிச்சலை தாங்கிக்கொண்டு ரெயிலை இயக்கினார்.

உடனடியாக ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். ரெயில் மும்ரா வந்ததும் மாற்று மோட்டார்மேன் இல்லாததால் அவர் தண்ணீரால் கண்ணை கழுவினார். இருந்தாலும் கண் எரிச்சல் தீரவில்லை. கண்ணீர் பெருகிக்கொண்டே இருந்தது.

இந்தநிலையில், மும்ரா ரெயில் நிலைய துணை கண்காணிப்பாளர் உதவியுடன் மேற்கொண்டு ரெயிலை கல்யாண் வரை இயக்கினார்.

18 கி.மீ. தூரம்

கல்யாண் வந்ததும் அவர் சிகிச்சைக்காக ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அந்த ரெயில் கல்யாணில் இருந்து மாற்று மோட்டார் மேன் மூலம் இயக்கப்பட்டு டிட்வாலா சென்றது. ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதனையில், மிளகாய் பொடி விழுந்ததில் அவருக்கு கண்ணில் பெரியளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.

இது குறித்து மத்திய ரெயில்வேயின் மும்பை கோட்ட மேலாளர் சஞ்சய் ஜெயின் கூறுகையில், ‘‘லட்சுமண் சிங்கின் அர்ப்பணிப்புக்குரிய பணி பாராட்டத்தக்கது. அவர் மிளகாய் பொடி தூவியதில் கண்ணில் ஏற்பட்ட எரிச்சலையும் தாங்கிக்கொண்டு கல்வாவில் இருந்து கல்யாண் வரை 18 கி.மீ. தூரத்துக்கு ரெயிலை இயக்கி இருக்கிறார்’’ என்றார்.

Next Story