ரெயில் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் 1 மணி நேரம் ரெயில் சேவை பாதிப்பு


ரெயில் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் 1 மணி நேரம் ரெயில் சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 19 Feb 2019 3:33 AM IST (Updated: 19 Feb 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலை மாமனார் கண்டித்த விரக்தி யில் ரெயில் நிலையத்தில் வாலிபர் தற்கொலைக்கு முயன்றார். இதனால் 1 மணி நேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

வசாய்,

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள பொய்சர் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேம்பாலத்தின் இரும்பு சட்டத்தின் மீது நின்று கொண்டு நேற்று காலை தற்கொலை செய்து கொள்வதற்காக வாலிபர் ஒருவர் கீழே செல்லும் ஓவர்ஹெட் மின்கம்பியை தொட முயற்சி செய்து கொண்டு இருந்தார்.

இதைப்பார்த்து அங்கிருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அவரை நோக்கி சத்தம்போட்டனர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு உண்டானது. சிலர் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

மீட்பு

விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அவரை சமாதானப்படுத்தி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் ஓவர்ஹெட் மின்கம்பியில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அந்த வாலிபர் மீட்கப்பட்டார். ரெயில்வே போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், அவர் பொய்சரில் வசித்து வரும் முகமது தமன்னா சேக்(வயது23) என்பது தெரியவந்தது.

கள்ளக்காதல் பிரச்சினை

அவரது சொந்த ஊர் பீகாரில் உள்ள சமஸ்திபூர் ஆகும். இவருக்கு மனைவி மற்றும் ஒரு கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில், அவருக்கு வேலை செய்யும் இடத்தில் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு உண்டானது.

அந்த பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து மனைவியின் கண்முன்னேயே உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இது அவரது மனைவிக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. கணவரிடம் சண்டையிட்டார். மேலும் தனது தந்தைக்கும் கணவரின் நடத்தையை பற்றி கூறினார். உடனே பொய்சர் வந்த அந்த பெண்ணின் தந்தை முகமது தமன்னா சேக்கை கடுமையாக திட்டி எச்சரித்து உள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவர் ரெயில் நிலையத்தில் வந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

போலீசார் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது தமன்னா சேக்கின் தற்கொலை முயற்சி காரணமாக சுமார் 1 மணி நேரம் மின்சார மற்றும் நீண்ட தூர ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Next Story