பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்


பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2019 4:00 AM IST (Updated: 19 Feb 2019 3:51 AM IST)
t-max-icont-min-icon

பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் ஈரோடு தொலைதொடர்பு வட்டத்தில் 128 தொலைபேசி அலுவலகங்கள் செயல்படவில்லை.

ஈரோடு,

நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு 3 நாள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி நேற்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. ஈரோடு தொலைத்தொடர்பு வட்டத்தில் உள்ள பொது மேலாளர் அலுவலகம், தொலைபேசி கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட 128 தொலைபேசி அலுவலகங்கள் செயல்படவில்லை.

ஈரோடு பொது மேலாளர் அலுவலகத்தில் பணியாளர்கள் யாரும் இல்லாமல் அலுவலகம் முழுமையும் வெறிச்சோடி கிடந்தது. பி.எஸ்.என்.எல். தொலைபேசி கட்டணம் செலுத்தவும், புகார்கள் அளிக்கவும் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

இதுபற்றி பி.எஸ்.என்.எல். அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:–

பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தின் முன்மொழிவின்படி பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும். பி.எஸ்.என்.எல். நில மேலாண்மை கொள்கைக்கு தாமதமின்றி ஒப்புதல் வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். உருவாக்கும் முன்பு மத்திய மந்திரிசபை எடுத்த முடிவின்படி பி.எஸ்.என்.எல். சொத்துகளை மாற்றிக்கொடுக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் உறுதித்தன்மையை மேம்படுத்த பொருளாதார உதவிகள் வழங்க வேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு தொலைத்தொடர்பு வட்டத்துக்கு உள்பட்ட 725 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், 400 ஒப்பந்த தொழிலாளர்கள் என மொத்தம் 1,125 பேர் முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறோம். 3 நாட்கள் முழுமையாக இந்த போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story