தூத்துக்குடி அருகே பரிதாபம் தந்தையுடன் சென்ற சிறுமி லாரி மோதி பலி


தூத்துக்குடி அருகே பரிதாபம் தந்தையுடன் சென்ற சிறுமி லாரி மோதி பலி
x

தூத்துக்குடி அருகே லாரி மோதிய விபத்தில், தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தார்.

ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் பெரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சிப்காட் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஆனந்தி (வயது 8) என்ற மகளும், யஷ்வந்த் (3) என்ற மகனும் உள்ளனர். ஆனந்தி அருகே உள்ள அந்தோணியார்புரத்தில் ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால், மணிகண்டன் தனது குழந்தைகள் 2 பேரையும் அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி துறைமுக கடற்கரை பகுதிக்கு சென்றார். அங்கு சிறுவர்கள் ஆனந்தமாக விளையாடினர். பின்னர் இரவு 8 மணிக்கு மணிகண்டன் தனது குழந்தைகளை அழைத்து கொண்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

மோட்டார் சைக்கிளில் முன் பகுதியில் யஷ்வந்தும், பின் பகுதியில் சிறுமி ஆனந்தியும் அமர்ந்து இருந்தனர். மோட்டார் சைக்கிளில் 3 பேரும் துறைமுக பைபாஸ் ரோட்டில் உப்பாற்று ஓடையை கடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள தனியார் எடைநிலையம் அருகே சென்ற போது, சிறுமி தூக்கத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து ஒரு பக்கமாக சரிந்தாராம். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் பின்னால் வந்த லாரி, பயங்கரமாக மோதியதில் சிறுமி மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார். மணிகண்டனுக்கும், யஷ்வந்துக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

படுகாயம் அடைந்த சிறுமி ஆனந்தி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தாள்.

இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story