அரசு அறிவித்த நிவாரண தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்


அரசு அறிவித்த நிவாரண தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்
x
தினத்தந்தி 18 Feb 2019 11:00 PM GMT (Updated: 18 Feb 2019 10:27 PM GMT)

தமிழக அரசு அறிவித்த ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் குளறுபடி உள்ளதாக கூறி விண்ணப்பம் அளிக்க ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்தனர். காலை 9 மணியில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவியத்தொடங்கினர்.

அவர்கள் கிராமங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டதில் முறைகேடு உள்ளது. இதனால் மாநில அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம், மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.6 ஆயிரம் தங்களுக்கு கிடைக்காமல் போகும் எனக்கூறி கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் கூட்ட அரங்கிற்கு மனுக்களை கொடுக்க சென்றனர்.

அப்போது ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்றதால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைதொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் அருள்மணி ஆகியோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்து அங்கு கூடியிருந்தவர்களிடம் மனுக்களை நேரடியாக பெற்றனர்.

அப்போது மனு அளிக்க வந்த கிராம பெண்கள் கூறியதாவது:– வறுமைக்கோடு பட்டியல் எடுத்து சுமார் 15ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதில் வசதியானவர்களின் பெயர் தான் உள்ளது. ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. இதனால் தற்போது அரசு அறிவித்துள்ள பணம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.

எனவே வறுமைக்கோடு பட்டியலை மீண்டும் ஆய்வு செய்து புதிய பட்டியல் தயார் செய்ய வேண்டும். ஏற்கனவே உள்ள பட்டியல்படி வழங்கக்கூடாது என்றனர். அதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது


Next Story