பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் அலுவலகங்கள் வெறிச்சோடின; சேவை மையங்கள் மூடல்


பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் அலுவலகங்கள் வெறிச்சோடின; சேவை மையங்கள் மூடல்
x
தினத்தந்தி 19 Feb 2019 3:58 AM IST (Updated: 19 Feb 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடின. சேவை மையங்கள் மூடப்பட்டன.

தூத்துக்குடி,

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கடந்த டிசம்பர் மாதம் 3-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த இருந்தனர். அப்போது மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் அளித்த வாக்குறுதியின் பேரில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் கோரிக்கைகளை இதுவரை அமல்படுத்தவில்லை.

இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 15 சதவீதம் ஊதிய நிர்ணய பலனுடன் 3-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். 01-01-17 முதல் பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். 2-வது ஊதிய மாற்றக்குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நில மேலாண்மை கொள்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரங்களை பராமரிக்கும் பணியை தனியாரிடம் வழங்க கூடாது என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இந்த போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுமார் 350 ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களும் பங்கேற்று உள்ளனர். இந்த போராட்டம் வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது. இதனால் பி.எஸ்.என்.எல். சேவை மையங்கள் மூடப்பட்டு இருந்தன. அதே போன்று தொலைபேசி அலுவலகங்களில் பணியாளர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் தொலைபேசி பழுது நீக்குதல், பில் கட்டணம் செலுத்துதல் போன்ற அனைத்து சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றும் 110 பேரில் 5 பேர் மட்டுமே நேற்று பணிக்கு வந்தனர். இதனால் அங்கு எந்த பணிகளும் நடைபெறாததால், அலுவலகம் மூடிக் கிடந்தது.

கோரிக்கைகளை வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஊழியர்கள், அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக காஷ்மீர் மாநிலத்தில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

Next Story