தூத்துக்குடி கலவரத்தில் படுகாயம் அடைந்த வாலிபரின் அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டும் கலெக்டரிடம் தாய் கோரிக்கை


தூத்துக்குடி கலவரத்தில் படுகாயம் அடைந்த வாலிபரின் அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டும் கலெக்டரிடம் தாய் கோரிக்கை
x
தினத்தந்தி 18 Feb 2019 10:52 PM GMT (Updated: 18 Feb 2019 10:52 PM GMT)

தூத்துக்குடி கலவரத்தில் படுகாயம் அடைந்த வாலிபருக்கு அறுவை சிகிச்சை செய்ய உதவ வேண்டும் என்று அவருடைய தாயார், மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது சாத்தான்குளம் முதலூர் ஊராட்சி ஆத்திக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில், ‘முதலூர் ஊராட்சியில் உள்ள பிள்ளாநெறி குளத்தில் உள்ள நீர் ஆதாரத்தை நம்பி சுமார் 50 ஏக்கர் நிலத்தில் விவசாயிகளான நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் அதே பகுதியை சேர்ந்த 2 பேர் குளத்தை ஆக்கிரமித்து விவசாயிகளை மிரட்டி வருகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி கருணாநிதி நகரை சேர்ந்த பிரம்மசக்தி என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது மகன் விஜயகுமார் கடந்த மே மாதம் 22-ந்தேதி வேலைக்கு சென்று திரும்பிய போது, தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் துப்பாக்கிகுண்டு பாய்ந்து வலது காலில் எலும்பு உடைந்து பாதிக்கப்பட்டான். அவனை மதுரையிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தோம். தற்போது அவனுக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இல்லை என்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். ஏற்கனவே செய்த சிகிச்சைக்கு எந்தவித நிதியும் வழங்கப்படவில்லை என ஆஸ்பத்திரி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே உயிருக்கு போராடும் எனது மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கத்தினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘எங்கள் சங்கத்தினர் முடிதிருத்தும் தொழில் செய்து வருகிறார்கள். எங்களுக்கு கிடைக்கும் வருமானம் அன்றாட வாழ்க்கைக்கு சரியாக இருக்கிறது. நாங்கள் வாடகை வீட்டில் தான் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டுமனை அல்லது தொகுப்பு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

வெம்பக்கோட்டை தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்களுக்கு சொந்தமான விவசாய இடம் 56 ஏக்கர், கயத்தாறு தாலுகா திருமலாபுரத்தில் உள்ளது. இந்த நிலம் கடந்த 50 ஆண்டுகளாக தரிசாக உள்ளது. இந்த நிலையில் அந்த இடத்தை கடம்பூர் பரம்புக்கோட்டையை சேர்ந்த 2 பேர் போலி ஆவணங்கள் தயார் செய்து 2016-17-ம் ஆண்டில் அந்த நிலத்தில் பயிர் செய்ததாக கூறி, கடம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.6 லட்சம் பயிர் காப்பீடு பெற்று மோசடி செய்துள்ளனர். இந்த மோசடியை விசாரித்து இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி இருந்தனர்.

Next Story