ஸ்டெர்லைட் நிர்வாகம் ஐகோர்ட்டு சென்றாலும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தூத்துக்குடி கலெக்டர் பேட்டி


ஸ்டெர்லைட் நிர்வாகம் ஐகோர்ட்டு சென்றாலும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தூத்துக்குடி கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 19 Feb 2019 4:37 AM IST (Updated: 19 Feb 2019 4:37 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் நிர்வாகம் ஐகோர்ட்டு சென்றாலும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாரணை வெளியிட்டு, ஆலை மூடப்பட்டது.

இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க அனுமதி அளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பு நேற்று வெளியானதையொட்டி தூத்துக்குடிக்கு 1,600 போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முக்கிய இடங்களில் வஜ்ரா வாகனம், கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் மக்கள் மத்தியில் பீதி ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் ஆங்காங்கே போலீசார் குவிக்கப்படாமல் குறைந்த அளவில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

ஆனால், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அலுவலகத்துக்கு செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்தனர். அனைவரது அடையாள அட்டையையும் பார்த்த பிறகே அலுவலகத்துக்குள் அனுமதித்தனர். இதனால் பரபரப்பாக காணப்பட்டது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்து உள்ள தீர்ப்பு சந்தோசமான, அனைவரும் வரவேற்கக்கூடிய தீர்ப்பு. தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். தமிழக முதல்-அமைச்சர் சட்டத்தின் மூலம் போராடுவதற்கான வாய்ப்பு இருக்கும் வரை போராடுவோம். நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்று கூறினார்.அதன்படி அரசுக்கு வெற்றி கிடைத்து உள்ளது. 2 வகையாக வாதங்கள் வைக்கப்பட்டன. ஒன்று அரசாணைக்கு எதிராக விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை என்று விவாதம் வைக்கப்பட்டது. அதன் மீது நல்ல தீர்ப்பு வந்து உள்ளது. ஏற்கனவே சொன்னது போன்று ஆலை மூடி இருக்கும். அதுதான் அரசின் முடிவு.

மேலும் ஸ்டெர்லைட் நிறுவனம் தேவைப்பட்டால் ஐகோர்ட்டை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஐகோர்ட்டுக்கு சென்றால், அங்கும் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழக அரசின் முடிவு ஆலை மூடப்பட வேண்டும் என்பதுதான். மக்களின் கோரிக்கையை ஏற்றுதான் ஆலை மூடப்பட்டு உள்ளது. மக்கள் அச்சமின்றி, பயமின்றி இருக்க வேண்டும். தேவை இல்லாமல் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த வேண்டியதில்லை. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் அடுத்தக்கட்டமாக அரசு உத்தரவுப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது ஆலையில் இருந்து ரசாயன பொருட்கள் அகற்றும் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த சம்பவத்துக்கு பிறகு முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தீர்ப்பு வந்ததையொட்டி சற்று அதிகமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மக்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்காகவே போலீசார் பணியமர்த்தப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story