கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் குறைந்து வரும் வைகை அணை நீர்மட்டம்


கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் குறைந்து வரும் வைகை அணை நீர்மட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2019 3:30 AM IST (Updated: 19 Feb 2019 10:19 PM IST)
t-max-icont-min-icon

கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது. 71 அடி உயரம் கொண்ட அணையில் இருந்து இருபோக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை. மேலும் எதிர்பார்த்தப்படி வடகிழக்கு பருவமழையும் கை கொடுக்கவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று விட்டது. மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 50 அடியாக குறைந்தது.

அதன்பிறகு வைகை அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தநிலையில் மதுரை மாவட்ட பாசனத்துக்காக வினாடிக்கு 700 கனஅடி வீதம் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து இல்லாத நிலையில், வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணை நீர்மட்டம் 3 அடி குறைந்து விட்டது. இந்தநிலையில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது நேற்று காலை நிறுத்தப்பட்டது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டம் மள, மளவென குறைந்து வருகிறது. இதனால் தற்போது அணையில் இருப்பு உள்ள தண்ணீரை கொண்டு கோடைக்காலத்தை சமாளிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று காலை 6 மணியளவில் வைகை அணை நீர்மட்டம் 47.08 அடியாக காணப்பட்டது. நீர்வரத்து இல்லாத நிலையில், மதுரை மாநகர குடிநீர் தேவைக்கு மட்டும் வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Next Story