வேடசந்தூர் அருகே பரபரப்பு, பள்ளி மாணவர்களை வேனில் கடத்த முயற்சி


வேடசந்தூர் அருகே பரபரப்பு, பள்ளி மாணவர்களை வேனில் கடத்த முயற்சி
x
தினத்தந்தி 19 Feb 2019 10:45 PM GMT (Updated: 19 Feb 2019 5:37 PM GMT)

வேடசந்தூர் அருகே பள்ளி மாணவர்களை வேனில் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள பள்ளிக்கூடத்தான்புதூரை சேர்ந்த பாலமுருகன் மகன் கந்தவேல் (வயது 7). அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கனகராஜ் (9). நாகையகோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கந்தவேல் 2-ம் வகுப்பும், கனராஜ் 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் கந்தவேல், கனகராஜ் மற்றும் மாணவர்கள் சிலர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். நாகையகோட்டை-புதுரோடு சாலையில் பள்ளிக்கூடத்தான்புதூர் பிரிவு அருகே சென்றபோது, அந்த வழியாக வேன் ஒன்று வேகமாக வந்தது.

பின்னர் மாணவர்கள் அருகே வந்ததும் வேனை நிறுத்திய மர்மநபர்கள் 5 பேர், அதில் இருந்து கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் சாலையில் நடந்து சென்ற கந்தவேலையும், கனகராஜையும் வேனில் கடத்தி செல்ல முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் வந்த மாணவர்கள் கூச்சல் போட்டனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் மர்மநபர்கள் மாணவர்களை விட்டுவிட்டு வேனில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசில் மாணவர்களின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்களை வேனில் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story