கும்பகோணத்தில் மாசிமக தீர்த்தவாரி: மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடல்


கும்பகோணத்தில் மாசிமக தீர்த்தவாரி: மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடல்
x
தினத்தந்தி 19 Feb 2019 10:45 PM GMT (Updated: 19 Feb 2019 6:39 PM GMT)

கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரியையொட்டி மகாமக குளத்தில் பல்லாயிரக் கணக்கானோர் புனித நீராடினார்கள்.

கும்பகோணம்,

மாசிமக திருவிழாவையொட்டி மகாமக குளத்தில் நேற்று அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடினர். ஆண்டுதோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசிமக விழா கொண்டாடப்படுகிறது. இதே விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மாசிமக விழாவினை முன்னிட்டு கடந்த 10-ந் தேதி ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வ நாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவாலயங்களில் பத்து நாள் உற்சவம் நடைபெற்றது. விழாவின் 5-ம் நாள் ஓலைச்சப்பரமும், 9-ம் நாள் விழாவில் தேரோட்டமும் நடைபெற்றது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 12 சிவாலயங்களில் இருந்து சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளினர்.

பின்னர் பகல் 12 மணிக்கு அந்தந்த கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு 21 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடியதை தொடர்ந்து குளத்தின் 4 கரைகளிலும் மற்றும் குளத்திலும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

தீர்த்தவாரியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணி முதல் நேற்று மாலை வரை தொடர்ந்து மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார், தீயணைப்பு வீரர்கள், அறநிலையத்துறையினர், மருத்துவ குழுவினர், வருவாய்த்துறையினர், நகராட்சியினர் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

Next Story