2 ஆயிரத்து 432 டன் விளைபொருட்கள் ஆன்லைன் சந்தையில் விற்பனை
திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 432 டன் விளைபொருட்கள் ஆன்லைன் சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகளுக்கான ஆன்லைன் விற்பனை சந்தை செயல்படுகிறது. இதனை கலெக்டர் டி.ஜி.வினய் ஆய்வு செய்தார். அப்போது ஆன்லைன் விற்பனை சந்தையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:-
கொடைக்கானலில் பீன்ஸ், கேரட், பூண்டு, சிறுமலையில் மலை வாழைப்பழம், குஜிலியம்பாறையில் சின்ன வெங்காயம், வேடசந்தூரில் முருங்கைக்காய், ஆயக்குடியில் கொய்யாப்பழம், நத்தத்தில் மாம்பழம் போன்றவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் வேடசந்தூரை மையமாக வைத்து உணவு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் பயறு வகைகளும் குறிப்பிடத்தக்க அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அதேநேரம் தமிழ்நாட்டை பொறுத்தவரை பயறு வகைகளுக்கு அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் இல்லை. இதனால் விவசாயிகள் விளை பொருட் களுக்கு உரிய விலை கிடைப்பது இல்லாமல் இருந்தது. எனவே, விவசாயிகளும் பயறு வகைகளை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டுவது இல்லை. இதையடுத்து பயறு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயித்தது.
இதைத் தொடர்ந்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் ஆதார விலை திட்டத்தில் பயறு வகைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. அதன்படி திண்டுக்கல் விற்பனைக்குழு கட்டுப்பாட்டில் இயங்கும் திண்டுக்கல், பழனி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இதனால் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் கொடைக்கானல் கவுஞ்சி பகுதியில் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கிடையே வேளாண் விளைபொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கு, தேசிய வேளாண் விற்பனை சந்தையை அரசு தொடங்கியது. இதில் விவசாயிகள் இணைக்கப்பட்டு உள்ளனர். தேசிய அளவில் 585 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும், தமிழக அளவில் 30 கூடங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் விவசாயிகள் தங்களுடைய விளை பொருட் களுக்கு, எங்கு தேவை உள்ளது. அந்த தேவை எவ்வளவு நாட்களுக்கு இருக்கும் என்பதையும் அறியலாம். அதேபோல் வியாபாரிகளும் தேவையான பொருட்கள் எங்கு, எவ்வளவு இருப்பு உள்ளது என்பதை அறிந்து ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி வாங்கி கொள்ளலாம். இதனால் விவசாயிகள் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விளைபொருட்களை விற்று பயன்பெறுகிறார் கள்.
இந்த ஆன்லைன் சந்தைக்கு திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த ஆன்லைன் சந்தை மூலம் இதுவரை 2 ஆயிரத்து 361 விவசாயிகள், வணிகர்கள் இணைந்துள்ளனர். இதன்மூலம் 1,555¼ டன் நிலக்கடலை, 2¾ டன் வாழைப்பழம், 776¾ டன் பருத்தி, 20 டன் வெங்காயம், 26¾ டன் நெல், 50½ டன் மக்காச்சோளம் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 432 டன் விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதன் மதிப்பு ரூ.9 கோடியே 23 லட்சம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன், வேளாண் விற்பனைக் குழு செயலாளர் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story