மீன்கள் வரத்து குறைவால் பழையாறு துறைமுகத்தில் கருவாடு தயாரிக்கும் பணி பாதிப்பு தொழிலாளர்கள் வேதனை


மீன்கள் வரத்து குறைவால் பழையாறு துறைமுகத்தில் கருவாடு தயாரிக்கும் பணி பாதிப்பு தொழிலாளர்கள் வேதனை
x
தினத்தந்தி 20 Feb 2019 4:15 AM IST (Updated: 20 Feb 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

மீன்கள் குறைவாக கிடைப்பதால் பழையாறு துறைமுகத்தில் கருவாடு தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வியாபாரிகள், தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கு இருந்து தினமும் 350 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 300 நாட்டுப்படகுகள் மூலம் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். மேலும், துறைமுகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கருவாடு உலர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக கடலில் குறைவான சிறிய மீன்கள் கிடைப்பதால், பழையாறு துறைமுகத்தில் கருவாடு தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வியாபாரிகளும், தொழிலாளர்களும் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து பழையாறு பகுதி கருவாடு வியாபாரிகள் கூறியதாவது:-

பழையாறு துறைமுகத்தில் இருந்து ஒரு நாளைக்கு 8 டன் கருவாடுகள் கோழி தீவனத்திற்காக நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். தற்போது மீன்வரத்து குறைவாக இருப்பதால் ஒரு வாரத்திற்கு 8 டன் மட்டுமே கருவாடு நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், உணவுக்காக உலர வைக்கப்படும் கருவாடுகள் வாரத்திற்கு ஒரு டன் கூட தயார் செய்ய முடியவில்லை. இதனால் கருவாடு வியாபாரிகள் மற்றும் தொழிலாளார்கள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

பெரிய மீன்கள் அதிக அளவில் கிடைக்காததற்கு அதிவேக விசைப்படகுகள் மற்றும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்துவதே காரணமாகும். எனவே, தடை செய்யப்பட்ட அதிவேக விசைப்படகுகளையும், சுருக்கு மடி வலைகளை பயன்படுத்துவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story