கோவையில் 2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியதாக புகார்


கோவையில் 2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியதாக புகார்
x
தினத்தந்தி 19 Feb 2019 11:00 PM GMT (Updated: 19 Feb 2019 7:14 PM GMT)

கோவையில் 2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியதாக அரசு ஆஸ்பத்திரி மீது குற்றம்சாட்டி பெற்றோர் பரபரப்பு புகார் தெரிவித்தனர்.

கோவை,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 9 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கி அங்குள்ள தறிப்பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு அந்த வாலிபர் தனது மனைவியுடன் திருப்பூரில் வசித்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந் தேதி திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. அதில், பெண்குழந்தை 700 கிராம் எடையுடன் பிறந்தது. எனவே எடை குறைவாக பிறந்த பெண் குழந்தைக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து 32 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனால் அந்த குழந்தையின் எடை 1 கிலோ 140 கிராம் அளவுக்கு அதிகரித்தது. இதையடுத்து இரட்டை குழந்தைகளுடன் அவர்கள் திருப்பூரில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில், 2 வயதான அந்த பெண் குழந்தைக்கு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி சளி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று உள்ளனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் அந்த குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது என கூறி ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தையின் இதயத்தில் ஓட்டை இருப்பதாக கூறி உள்ளனர். மேலும் ரத்தம் குறைவாக இருந்ததால் ஜூலை மாதம் 12-ந் தேதி ரத்தம் ஏற்றி உள்ளனர். அது தொடர்பான சிகிச்சை முடிந்த பிறகு அவர்கள் குழந்தையுடன் பெற்றோர் வீடு திரும்பினர்.

இந்தநிலையில் அந்த குழந்தைக்கு கடந்த 6-ந் தேதி மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கழுத்து பகுயில் கட்டி போன்று இருந்தது. மேலும் சளித்தொல்லை அதிகளவு இருந்தது.

இதனால் அந்த குழந்தையை மீண்டும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு குழந்தைக்கு பல்வேறு கட்ட சோதனை நடத்தப்பட்டது. இதில், அந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாக கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள், எங்கள் இருவருக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை. ஆனால் குழந்தைக்கு எப்படி எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டது? என்று பெற்றோர் டாக்டர்களிடம் கேள்வி எழுப்பினர். இதைத்தொடர்ந்து அந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் அவர்களின் ஆண் குழந்தைக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து தங்களுடைய குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியில் ஏற்றப்பட்ட ரத்தம் காரணமாக தான் எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என்று குற்றம் சாட்டினர்.

இது குறித்து அந்த குழந்தையின் தந்தை நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது பெண் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாக கூறி கோவை அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் ஏற்றினார்கள். அப்போது நான் மட்டும் தான் குழந்தையுடன் இருந்தேன். எனது மனைவி வெளியே சென்று இருந்தார். அந்த சமயத்தில் ரத்தம் ஏற்றிய ஒரு டாக்டர் வெளியே சென்று விட்டார். அங்கு வந்த மற்றொரு டாக்டர் அவசரமாக அந்த ரத்த பாட்டிலை எடுத்து விட்டார். பின்னர் குழந்தைக்கு ரத்தம் ஏற்றப்பட வில்லை.

உடனே, நான் அந்த டாக்டரிடம் கேட்டபோது இது பெரியவர்களுக்கு ஏற்றும் ரத்தம் என கூறினார். அடுத்து 3 நாட்களில் எனது குழந்தையை ஆஸ்பத்திரியில் இருந்து அனுப்பி வைத்தனர். அப்போது, குழந்தையின் இதயத்தில் ஓட்டை இருப்பதாக கூறினீர்கள். ஆனால் 3 நாளில் வீட்டுக்கு செல்லலாம் என்று கூறுவது ஏன்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை.

இதையடுத்து நாங்கள் ஒரு வாரம் புறநோயாளியாக குழந்தைக்கு சிகிச்சை பெற்றோம். இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குழந்தையின் காது, உடம்பில் கட்டி வந்தது. இதனால் அம்மை நோய் தாக்கி இருக்கலாம் என கருதி மருந்து கொடுத்தோம். ஆனால் குணமாக வில்லை. இதையடுத்து கடந்த 6-ந் தேதி குழந்தையை மீண்டும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தோம்.

அங்கு குழந்தையின் ரத்தத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாக தெரிவித்தனர். அதை கேட்டதும் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். இதையடுத்து எங்கள் 3 பேருக்கும் எச்.ஐ.வி. தொற்று இருக்கிறதா? என பரிசோதனை செய்தனர். ஆனால் எங்களுக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என்று கூறினர். ஆனால் அதற்கான சான்றிதழை கொடுக்க வில்லை. இதனால் சந்தேகம் ஏற்பட்டது.

எனவே கோவை அரசு ஆஸ்பத்திரியில் நாங்கள் டோக்கன் பெற்று 3 பேரும் தனித்தனியாக ரத்த பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்றோம். அந்த சான்றிதழில் எங்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. எங்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லாதபோது குழந்தைக்கு மட்டும் இந்த தொற்று எப்படி ஏற்பட்டது? எங்கள் குழந்தை பிறந்த திருச்சி அரசு ஆஸ்பத்திரி தவிர கோவை அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் தான் நாங்கள் சிகிச்சை அளித்துள்ளோம். மேலும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி குழந்தைக்கு திருப்பூரில் உள்ள ஒரு துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி மட்டும் தான் போட்டு உள்ளோம். எனவே எனது குழந்தைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தான் எச்.ஐ.வி.ரத்தம் ஏற்றப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது என்று கருதுகிறேன்.

இது தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் புகாரை வாங்க போலீசார் மறுத்து விட்டனர். இதனால் மனிதஉரிமை அமைப்பு, மக்கள் கண்காணிப்பகத்தை நாடினேன். குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு எப்படி ஏற்பட்டது? என்பது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றி மிகப்பெரிய குற்றம் செய்த அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைக்கு உயர் தர சிகிச்சை அளிக்க வேண்டும். எனது குழந்தைக்கு ஏற்பட்டது போன்று பிற குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது.

இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.

இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த குழந்தை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்தபோது 700 கிராம் எடைதான் இருந்தது. பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணித்து சிகிச்சை அளித்துள்ளனர். பிறகு பல்வேறு மருத்துவமனைகளில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை சிகிச்சைக்காக அழைத்து வந்தபோது சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அந்த குழந்தைக்கு சிவப்பு ரத்த அணுக்கள் மட்டும் ஏற்றப்பட்டது. இதன் மூலம் குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை.

சிவப்பு ரத்த அணுக்கள் ஏற்றப்பட்ட உறையின் சீரியல் எண்ணை பரிசோதனை செய்வதற்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரி பரிசோதனை கூடத்திற்கும் அனுப்பி சோதனை செய்து விட்டோம். சிவப்பு ரத்த அணுக்கள் ரத்தம் அளித்த கொடையாளரிடமும் பரிசோதனை செய்ததில் அவருக்கும் எச்.ஐ.வி. தொற்று இல்லை என்பது நிரூபணமாகி உள்ளது. இந்த குழந்தையின் தம்பதியினர் பல்வேறு மருத்துவமனைகளில் குழந்தைக்கு சிகிச்சை அளித்து உள்ளதால் அங்கு வைத்து குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டு இருக்கும். எச்.ஐ.வி.யால் பாதித்து உள்ள குழந்தைக்கு தற்போது அரசு ஆஸ்பத்திரி ஏ.ஆர்.டி. சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சுவடு மறைவதற்குள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் 2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதாக கூறப்படுவதால் பொதுமக்கள் பீதிஅடைந்து உள்ளனர்.

Next Story