மாசிமக பெருவிழாவையொட்டி திருமானூரில் ஜல்லிக்கட்டு; காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு


மாசிமக பெருவிழாவையொட்டி திருமானூரில் ஜல்லிக்கட்டு; காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 20 Feb 2019 4:30 AM IST (Updated: 20 Feb 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

மாசிமக பெருவிழாவையொட்டி திருமானூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் கிராமத்தில் மாசிமக பெருவிழாவையொட்டி நேற்று ஊரின் நடுவே உள்ள தெருவில் வாடிவாசல் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் தலைமை அரசு கொறடா ராஜேந்திரன் கலந்து கொண்டு கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். இதில் கோட்டாட்சியர் சத்யநாராயணன், தாசில்தார் கதிரவன் மற்றும் தமிழ்நாடு இளைஞர் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் கார்த்திக் மற்றும் துணை தலைவர் விஜயபார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர்.

இதில் பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்க முயன்றனர். இதில் பல காளைகள் மாடுபிடி வீரர்களால் அடக்கப்பட்டன. சில காளைகள் வீரர்களை அருகில் கூட நெருங்க விடாமல் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தன. இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வெற்றி பெற்ற காளைகளுக்கும் கட்டில், சோபா, சைக்கிள், சில்வர் குடம், அண்டா, மின்விசிறி, தங்ககாசுகள், வெள்ளி காசுகள் மற்றும் ரொக்கம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டில் சிறப்பாக மாடுகளை பிடித்தவர்களுக்கு கேடயங்களை பரிசாக வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். இதில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதி உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே களத்திற்கு அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் மொத்தம் 490 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டில் மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா மற்றும் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் ஆகியோர் தலைமையில், 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்களுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த திருமானூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது 40), குமார் என்பவரின் மகன் மணிகண்டன்(23) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றனர். காலை 9 மணி அளவில் தொடங்கப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு மதியம் 3 மணி அளவில் அனைத்து காளைகளும் அவிழ்த்து விடப்பட்டு முடிவடைந்தது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர். 

Next Story