விபத்தில் 6 பேர் படுகாயம் போதையில் காரை ஓட்டிய என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் கைது
குடிபோதையில் வேகமாக காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை,
சென்னை பிராட்வேயில் இருந்து அடையாறு நோக்கி நேற்று முன்தினம் ஒரு கார் அதிவேகத்தில் சீறி பாய்ந்தது. காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்து கொண்டு இருந்த போது அந்த கார் நிலைத்தடுமாறி, அங்கிருந்த ஆட்டோக்கள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் மீது பயங்கரமாக மோதி, நிற்காமல் சென்றது.
இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அந்த காரை மடக்கி பிடித்தனர். காரில் 2 வாலிபர்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 2 பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கார் மோதியதில் அந்த பகுதியில் இருந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குடிபோதையில் வேகமாக காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய ஜாக் ரிச்சர்ட்சன் (வயது 21), பிரியன் (20) ஆகிய 2 பேர் மீதும் அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் சென்னையில் என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story