பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.) சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.
சென்னை,
‘டாஸ்மாக்’ ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், படிப்படியான மதுவிலக்கு கொள்கையை நிறைவேற்றும் கால அட்டவணை வெளியிட வேண்டும், மதுவிலக்கு கொள்கையால் ஏற்படும் உபரி ஊழியர்களுக்கு அரசின் பிற துறைகளில் மாற்றுப்பணி வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.) சார்பில் சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் உள்ள சி.எம்.டி.ஏ. வளாகம் அருகே நேற்று காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.
சங்கத்தின் மாநில தலைவர் நா.பெரியசாமி தலைமையில், பொதுச்செயலாளர் த.தன சேகரன் முன்னிலையில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்தின்போது, ‘கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சரை சந்தித்து பேச அனுமதி வேண்டும்’ என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அதிகாரிகள் அழைத்ததின்பேரில், சங்க பிரதிநிதிகள் தலைமை செயலகம் சென்று அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், முதல்-அமைச்சரை சந்திக்கும் தேதி இறுதி செய்யப்படாததை தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இதனைத்தொடர்ந்து மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.
Related Tags :
Next Story