முதல் கட்டப்பாதை முழுவதும் திறக்கப்பட்ட நிலையில் மெட்ரோ ரெயிலில் தினசரி 1 லட்சம் பேர் பயணம்
சென்னையில் முதல் கட்டப்பாதை முழுவதும் திறக்கப்பட்ட நிலையில் மெட்ரோ ரெயிலில் தினசரி 1 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.
சென்னை,
சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், பொதுமக்களின் விரைவான, பாதுகாப்பான, குளு குளு வசதியுடன் கூடிய பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2-வது வழித்தடத்திலும் என 45 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது.
பயணிகள் வரவேற்பு
பயணிகள் மத்தியில் மெட்ரோ ரெயிலுக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தினமும் கல்லூரி மாணவர்கள், தனியார், அரசு நிறுவனங்களில் வேலைக்கு செல்வோர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் மெட்ரோ ரெயிலில் ஆர்வமுடன் பயணம் செய்து வருகிறார்கள். இதனால் மெட்ரோ ரெயிலுக்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளது.
குறிப்பாக உயர்த்தப்பட்ட மற்றும் சுரங்க ரெயில் நிலையங்களில் அலுவலக நேரங்களில் நடைமேடைகளில் நிற்பதற்கே சிரமம் ஏற்படும் வகையில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
1 லட்சம் பேர் பயணம்
சென்னையில் மெட்ரோ ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியில் இருந்து விரைவு பயணத்துக்கு பொதுமக்கள் மாறி வருகிறார்கள். அண்ணாசாலையில் போக்குவரத்து தொடங்குவதற்கு முன்பு 45 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். தற்போது அண்ணாசாலையில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இருப்பதால் சராசரியாக தினசரி 1 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கிறார்கள்.
மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதற்கு 6 வகையான கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தினசரி பயணம் செய்யும் கார்டு, சுற்றுலா கார்டு, குரூப் கார்டுகள் உள்பட 6 வகையான கார்டுகள் மூலம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். தள்ளுபடி கட்டணத்துடன் வழங்கப்படும் ‘ஸ்மார்ட்கார்டு’கள் மற்றும் சுற்றுலா அட்டைகளை பயணிகள் அதிகம் வாங்கி உபயோகித்து வருகிறார்கள்.
‘ஸ்மார்ட் கார்டு’
பயணிகள் இடையே ‘ஸ்மார்ட் கார்டு’களுக்கு வரவேற்பு ஏற்பட்டதையொட்டி 20 லட்சம் கார்டுகள் தயாரிக்கப்பட்டு உள்ளது. ‘ஸ்மார்ட் கார்டு’தாரர்ளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் கூட்டம் மேலும் அதிகரித்து உள்ளது.
குறிப்பாக சென்டிரல் மெட்ரோ, எழும்பூர், கோயம்பேடு பஸ் நிலையம், விமானநிலையம், ஆலந்தூர், வட பழனி, வண்ணாரப்பேட்டை, சைதாப்பேட்டை, பரங்கிமலை, கிண்டி, அண்ணாநகர் டவர், திருமங்கலம், எல்.ஐ.சி. ஆயிரம்விளக்கு உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story