ஓசூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 2 வாலிபர்கள் பரிதாப சாவு


ஓசூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 2 வாலிபர்கள் பரிதாப சாவு
x
தினத்தந்தி 19 Feb 2019 10:15 PM GMT (Updated: 2019-02-20T03:01:35+05:30)

ஓசூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரை சேர்ந்தவர் விக்கி (வயது 19), அதேபகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (19). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு பட்டரையில் தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர். நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் பாகலூரில் இருந்து ஓசூர் நோக்கி சென்றனர்.

தின்னபள்ளி என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் விக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாகலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story