அரக்கோணத்தில் தண்டவாளத்தில் இறங்கி பெண் பயணிகள் போராட்டம்


அரக்கோணத்தில் தண்டவாளத்தில் இறங்கி பெண் பயணிகள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2019 4:00 AM IST (Updated: 20 Feb 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் தண்டவாளத்தில் இறங்கி பெண் பயணிகள் போராட்டம் செய்தனர்.

அரக்கோணம், 

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, வேளச்சேரிக்கு தினமும் பெண்கள் சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை வழக்கம்போல் பெண் பயணிகள் வேலைக்கு செல்வதற்காக ரெயிலில் ஏறி அமர்ந்தனர். காலை 6.55 மணிக்கு புறப்பட வேண்டிய அந்த ரெயில் 7.15 மணி வரை புறப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பெண் பயணிகள் திடீரென ரெயிலில் இருந்து இறங்கி ரெயில் என்ஜின் முன்பு தண்டவாளத்தில் நின்று கொண்டு ரெயில் மறியல் போராட்டம் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகள், ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பெண்பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பெண் பயணிகள் கூறுகையில், காலை 6.55 மணிக்கு புறப்படும் இந்த ரெயிலில் சென்றால்தான் சென்னை சென்று அங்கிருந்து வேறு ரெயிலை பிடித்து நாங்கள் வேலைக்கு செல்லும் இடத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடிகிறது. அரக்கோணத்தில் பெண்கள் மின்சார ரெயில் கடந்த சில தினங்களாக காலதாமதமாக செல்கிறது. இதனால் குறித்த நேரத்திற்கு எங்களால் பணிக்கு செல்ல முடியவில்லை. அலுவலகம், தொழிற்சாலைகளில் தினமும் காரணம் சொல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. ஆகவே பெண்கள் மின்சார ரெயில் தினமும் சரியான நேரத்திற்கு புறப்பட வேண்டும் என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், அரக்கோணம் அருகே யார்டு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் அரக்கோணத்தில் இருந்து புறப்படும் ரெயில்கள் யார்டு வரை குறைந்த வேகத்தில் சென்று வருகிறது. இதனால்தான் காலதாமதம் ஏற்படுகிறது. பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின்சார ரெயில்கள் சரியான நேரத்திற்கு சென்று வரும் என்றனர்.

இதையடுத்து பெண் பயணிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் பெண்கள் சிறப்பு மின்சார ரெயில் அரக்கோணத்தில் இருந்து 7.40 மணிக்கு புறப்பட்டு சென்றது.

பெண் பயணிகள் திடீரென தண்டவாளத்தில் நின்று கொண்டு ரெயில் மறியல் செய்ததால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story