மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாக்கடைக்குள் தவறி விழுந்து பேராசிரியர் சாவு
மோட்டார் சைக்கிளில் சென்ற பேராசிரியர் சாக்கடைக்குள் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
சென்னிமலை,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பெரிய வேட்டுவபாளையம் எல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் லோகநாதன் (வயது 34). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர் 2 திருமணம் செய்து கொண்டு மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்து வந்தார்.
லோகநாதன் பவுர்ணமி தோறும் மொடக்குறிச்சியில் உள்ள தன்னுடைய குலதெய்வமான கரிய காளியம்மன் கோவிலுக்கு சென்று வருவார்.
அதன்படி நேற்று காலை எல்லைமேட்டில் இருந்து மொடக்குறிச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
வெள்ளோடு அருகே சின்னகுளம் பகுதியில் சென்றபோது லோகநாதன் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் அவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த சுமார் 5 அடி ஆழமுள்ள சாக்கடைக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்தது.
இதில் சாக்கடைக்குள் விழுந்த லோகநாதன் மீது மோட்டார் சைக்கிள் விழுந்து அமுக்கியது. இதனால் அவர் படுகாயம் அடைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் இந்த சம்பவம் குறித்து வெள்ளோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று சாக்கடையில் கிடந்த லோகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.