10 ஆண்டு மத்திய அரசில் இருந்த தி.மு.க. தமிழகத்துக்கு செய்தது என்ன? மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி
10 ஆண்டு மத்திய அரசில் இருந்த தி.மு.க., தமிழகத்துக்கு என்ன செய்தது என்று மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நேற்று காலை சென்னை செல்லும் வழியில் விழுப்புரம் வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம்,
மத்திய அரசில் 10 ஆண்டு அங்கம் வகித்த தி.மு.க. தமிழகத்திற்கு என்ன செய்தது?. எத்தனை திட்டங்களை கொண்டு வந்தது. என்ன சாதனைகளை நிகழ்த்தினர். அதனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்றைக்கே பட்டியல் வெளியிட்டால் அது சரியாக இருக்கும்.
அதே நேரத்தில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு இந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்து இருக்கிறது என்பதை பற்றி பொது மேடையில் விவாதம் நடத்த பா.ஜ.க. தயாராக இருக்கிறோம், ஸ்டாலின் தயாரா?.
தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம் செய்தது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி. இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதை மறைக்க தி.மு.க. நாடகங்கள் நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் வளர்ச்சி பாதையில் மோடி அரசாங்கம், ஒட்டுமொத்த நாட்டிற்கும், தமிழகத்திற்கும் தந்திருக்கும் திட்டங்களை பற்றியும் விவாதம் நடத்தப்படும்.
குறிப்பாக 2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின்போது காங்கிரஸ், தி.மு.க., 1½ லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு எந்த வகையில் எல்லாம் காரணமாக இருந்தார்கள், எப்படியெல்லாம் தமிழர்களை பழிதீர்த்தார்கள் என்று விளக்கங்கள் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. வைகோ, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இதைப்பற்றி விரிவாக பேசினாரே அதே கேள்வியை அங்கேயும் எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story