தகுதியுடைய அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கக்கோரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


தகுதியுடைய அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கக்கோரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 19 Feb 2019 10:45 PM GMT (Updated: 19 Feb 2019 10:07 PM GMT)

தகுதியுடைய அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கக்கோரி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

மடத்துக்குளம்,

வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு சிறப்பு நிதியுதவியாக குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் இதற்கான கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. மடத்துக்குளம் அருகே துங்காவி ஊராட்சி 2, 3 மற்றும் 9–வது வார்டுகளிலும் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

ஆனால் இந்த பணி முறையாக நடக்கவில்லை, தகுதியான குடும்பத்தினர் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று கூறி, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி துங்காவி அலுவலகம் சென்றனர். பின்னர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது அங்கு வந்த ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். ஆனால் பொதுமக்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை என்றும், உயர் அதிகாரிகள் வரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து மடத்துக்குளம் வட்டார வளர்ச்சி அதிகாரி சாந்தி அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கூறும்போது ‘‘கூலிவேலை செய்துவரும் எங்களை வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள பட்டியலில் சேர்க்கவில்லை. கணக்கெடுப்பு நடத்துபவர்கள், பெயரளவில் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

இதனை முறையாக செய்திடவும், விடுபட்ட நபர்கள் மற்றும் அனைத்து தகுதியுடைய பொதுமக்களை விரைந்து பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும். தகுதி உடைய அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்றனர். பொதுமக்களின் கோரிக்கையை கேட்ட சாந்தி கூறியதாவது:–

பொதுமக்களின் கோரிக்கை நியாயமானதுதான், என்றாலும் துங்காவி ஊராட்சி பகுதியில் தற்போது உள்ள 2 ஆயிரம் நபர்களில், அதில் பாதி அளவுடைய பெயர்கள் மட்டுமே பட்டியலில் இடம் பெறும். மீதி உள்ளவர்கள் வசதி படைத்தவர்கள் என புள்ளி விபரம் தெரிவிக்கின்றன. தற்போது கணக்கெடுக்கும் பணிகள் துவங்கி சில நாட்கள்தான் ஆகிறது. தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது.

எனவே தகுதியுடைய அனைவருக்கும் பட்டியலில் பெயர் சேர்க்க, துங்காவி வறுமை ஒழிப்பு சங்கத்தால் பரிந்துரை செய்யப்படும். அவ்வாறு தயார் செய்யப்பட்ட பட்டியலை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வைக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே பட்டியலை வெளியிடுவோம் எனவே அதுவரை தொடர்ந்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story