பேராவூர் அருகே குழாய் உடைப்பால் வீணாகி வரும் குடிநீர்
ராமநாதபுரத்தை அடுத்துள்ள பேராவூர் அருகே குழாயில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீர் வீணாகி வருகிறது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை கருத்தில் கொண்டு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருச்சி அருகே முக்கொம்பு காவிரி ஆற்றுப்படுகையில் ராட்சத கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் சுமார் 300 கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
இந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்திருந்தால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி நிலையில் குடிநீரே இல்லாத சூழல் ஏற்பட்டிருக்கும். காவிரி குடிநீர் குழாய்களில் அழுத்தம் காரணமாக ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. சில இடங்களில் தண்ணீர் குளம்போல தேங்கி நிற்கிறது. அதனை பொதுமக்கள் குளிப்பதற்கும், துணிகளை துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்–தேவிபட்டினம் சாலையில் பேராவூர் அருகே தனியார் பள்ளி எதிரில் காவிரி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை உடனடியாக சரி செய்து தண்ணீர் வீணாவதை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.