சேத்தியாத்தோப்பு அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் கைது
சேத்தியாத்தோப்பு அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். இது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கடலூர்,
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி டாஸ்மாக் கடையில் சாக்காங்குடியை சேர்ந்த மோகன்(வயது 46) என்பவர் மேற்பார்வையாளராகவும், வளையமாதேவியைச்சேர்ந்த வீரமணி(41) என்பவர் உள்பட 3 பேர் விற்பனையாளராகவும் வேலை பார்க்கிறார்கள்.
இதில் விற்பனையாளர் வீரமணி பற்றி டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு மோகன் புகார் கடிதம் எழுதி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் வீரமணியை இடமாற்றம் செய்யாமல் இருக்க வேண்டுமானால் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருமாறு வீரமணியிடம் மேற்பார்வையாளர் மோகன் கேட்டுள்ளார்.
இது பற்றி வீரமணி கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மோகனை பொறி வைத்து பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வீரமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று வளையமாதேவி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த மோகன் வீரமணியிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு மெல்வின், இன்ஸ்பெக்டர் மாலா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மோகனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதன்பிறகு அவரை கடலூர் தலைமை குற்றவியல் நடுவர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவரை வருகிற 5-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி ரவி உத்தரவிட்டார். இதையடுத்து மோகன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story