ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
x
தினத்தந்தி 20 Feb 2019 4:36 AM IST (Updated: 20 Feb 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

பென்னாகரம்,

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல். இங்கு அருவிகள், முதலைப்பண்ணை, தொங்கு பாலம் போன்றவை உள்ளன. ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்தும், பரிசலில் பயணம் செய்தும் மகிழ்வார்கள். முதலைப்பண்ணையை பார்த்து ரசிப்பார்கள்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து பாய்ந்து வரும் காவிரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வந்தடைகிறது. கரடு முரடான பாறைகளில் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படும்போது காவிரியில் வெள்ளம் பாயும். அருவிகளிலும் தண்ணீர் அதிகளவில் கொட்டும்.

கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி நீர் அளவு பிலிகுண்டுலுவில் கணக்கெடுக்கப்படுகிறது. காவிரி ஆற்றில் கடந்த ஒரு மாதமாக வினாடிக்கு 400 கனஅடிக்கும் குறைவாகவே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் காவிரி ஆறு மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகள் பாறைகளாக காட்சியளித்தது.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. வினாடிக்கு 1,400 கனஅடி வீதம் தண்ணீர் ஆற்றில் வந்து கொண்டிருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் தண்ணீர் வரத்து அதிகரித்து மெயின் அருவியில் நீர் கொட்டுவதால் அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

இதுபற்றி சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அருவிகளை மூழ்கடித்தபடி காவிரியில் 1 லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் வந்தது. இதன்பின்னர் கடந்த 2 மாதங்களாக காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது. மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகள் பாறைகளாக காட்சி அளித்தது. இந்தநிலையில் தற்போது ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதை கேள்விப்பட்டதும் இங்கு வந்து குளித்தோம். கோடை தொடங்கும் நேரத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story