நாடாளுமன்ற தேர்தலில் துரோகம் செய்தவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்


நாடாளுமன்ற தேர்தலில் துரோகம் செய்தவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்
x
தினத்தந்தி 20 Feb 2019 4:45 AM IST (Updated: 20 Feb 2019 5:06 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் துரோகம் செய்தவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என சேலத்தில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

சேலம், 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இதையடுத்து டி.டி.வி. தினகரனுக்கு சேலம் கந்தம்பட்டியில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் பனங்காடு, சித்தர்கோவில், இளம்பிள்ளை, வேம்படிதாளம், அரியானூர் ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட கூடாது, அவர் குற்றவாளி என சொல்லி வந்தவர்களிடம் கூட்டணி வைத்து, ஜெயலலிதாவின் ஆன்மாவிற்கு துரோகம் செய்துள்ளனர். தமிழ்நாட்டு மக்கள் துரோகத்திற்கு துணை போகமாட்டார்கள். துரோகம் செய்தவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். தற்போது நடைபெறுவது மக்கள் விரோத ஆட்சி. மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் விரும்பாத ஆட்சி உள்ளது.

8 வழிச்சாலை திட்டத்தால் விவசாயிகள், இயற்கை வளங்கள் பாதிக்கப்படும் என்பதால் கோர்ட்டு இடைக்கால தடைவிதித்துள்ளது. இதை மக்களும் வரவேற்றுள்ளனர். விவசாயிகள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பண மதிப்பிழப்பால் வியாபாரிகள் பாதித்துள்ளனர். வெள்ளி தொழிலாளர்கள் ஜி.எஸ்.டி. யால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இரட்டை இலை சின்னம் இப்போது எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சின்னம் அல்ல. இரட்டை இலை துரோகிகள் சின்னம். 70 சதவீத இளைஞர்கள் அ.ம.மு.க.வை ஆதரிக்கிறார்கள். இப்போது அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி வடிகட்டிய சுத்த சந்தர்ப்ப வாத கூட்டணி ஆகும். கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. அரசை பா.ம.க. வினர் கடுமையாக விமர்சித்தார்கள். ஆனால் 7 சீட்டுக்காக அ.தி.மு.க. விடம் கையேந்தி நிற்கிறார்கள். தேர்தலில் பணமூட்டைகளை கொண்டு மக்களை விலைக்கு வாங்க முயற்சிப்பார்கள்.

ஊழல் அரசு ராஜதந்திரம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகிறது. நீட், ஜி.எஸ்.டி. உள்ளிட்ட ஜெயலலிதா எதிர்த்த திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மாநில கட்சிகளுக்கு வாக்களித்தால்தான், மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தப் படாமல் செய்ய முடியும்.

மக்களுக்கு உழைக்கும் கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம். கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசி வருகிறோம். இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். சேலம் நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் நிற்கும் வேட்பாளருக்கு பொதுமக்கள் வாக்களித்து மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும். நாங்கள் மக்கள் வரிப் பணத்தை சுரண்ட மாட்டோம். மேலும் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் 8 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெறவில்லை என்றால் ஆட்சி முடிந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.இ. வெங்கடாசலம், சேலம் மண்டல துணை தலைவர் டாக்டர் ஆர். சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story