வானவில் : விரைவில் வருகிறது போர்டு குகா
அமெரிக்காவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான போர்டு மோட்டார் நிறுவனம் குகா என்ற பெயரில் மற்றொரு எஸ்.யு.வி. மாடல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.
ஏற்கனவே இந்த மாடல் கார்கள் வட அமெரிக்காவில் மிகவும் பிரபலம். அங்கு இந்த மாடல் கார்கள் போர்டு எஸ்கேப் என்ற பெயரில் விற்பனையாகிறது. இதுவரை 1.5 லட்சம் கார்களை விற்றுள்ள நிலையில் இந்த மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
2017-ம் ஆண்டு போர்டு இந்தியா நிறுவனம் மற்றொரு ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி தொழில்நுட்பத்தை போர்டு பகிர்ந்து கொள்வது என்றும், விற்பனை விஷயத்தை மஹிந்திரா ஏற்பது என்றும் முடிவானது. அதன்படி மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 மாடல் எஸ்.யு.வி. தயாராகும் அதே பிளாட்பார்மில் போர்டு குகா தயாராகிறது. பிரீமியம் மாடலாக உருவாக்கப்படும் இந்த எஸ்.யு.வி. தற்போது 5 பேர் பயணிக்கும் வகையிலும் 7 பேர் பயணிக்கும் வகையிலும் தயாராகிறது.
இப்புதிய மாடலானது இந்நிறுவனத்தின் எகோ ஸ்போர்ட் மற்றும் எண்டேவர் ஆகிய இரண்டு மாடல்களுக்கும் இடைப்பட்டதாக இருக்கும். அதேசமயம் இதே பிரிவில் தயாராகும் ஜீப் கம்பாஸ் மற்றும் ஹூண்டாய் டக்சன் ஆகியவற்றுக்கு சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல் காரானது 2016-ம் ஆண்டிலேயே ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பணிக்காக இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதில் அருங்கோண வடிவிலான முன்புற கிரில், மிகச் சிறப்பான முகப்பு விளக்கு, எஸ்.யு.வி. கார்களுக்கே உரிய பிரமாண்டமான டயர்கள் அதை தாங்கும் அலாய் சக்கரங்கள், பெரிய அளவிலான தொடு திரை, ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, இன்போடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கண்ட்ரோல் வசதி, பன்முக பயன்பாடு கொண்ட ஸ்டீரிங் சக்கரம், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா, 6 ஏர்பேக்குகள் மற்றும் ஏ.பி.எஸ்., இ.பி.டி. வசதிகளோடு இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் விலையை ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை இந்நிறுவனம் நிர்ணயிக்கும் என்று தெரிகிறது. 2 லிட்டர் என்ஜினைக் கொண்ட டீசல் மாடலையும், 1.5 லிட்டர் என்ஜினைக் கொண்ட பெட்ரோல் மாடலையும் அறிமுகப்படுத்தியுள்ளன. பெட்ரோல் மாடல் 179 பி.ஹெச்பி. திறனும், டீசல் மாடல் 147 பி.ஹெச்.பி. திறனும் கொண்டிருக்கும். 6 கியர்களைக் கொண்டதாக இது வர உள்ளது.
Related Tags :
Next Story