வானவில் : ரூ.10.69 லட்சத்தில் கவாஸகி வெர்சிஸ் 1000
மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் முன்னணியில் திகழும் கவாஸகி நிறுவனம் சாகச பயணத்துக்கான புதிய மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
கவாஸகி வெர்சிஸ் 1000 என்ற பெயரில் வந்துள்ள இந்த மோட்டார் சைக்கிளின் விலை ரூ.10.69 லட்சமாகும். கடந்த ஆண்டு காட்சிப்படுத்தியிருந்த இந்த மோட்டார் சைக்கிளுக்கான முன்பதிவு இப்போது தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெர்சிஸ் எக்ஸ் 300 மற்றும் வெர்சிஸ் 650 ஆகிய மாடல்களைக் காட்டிலும் மேம்பட்ட ரகமாக அதிக குதிரைத் திறனுடன் இப்புதிய மாடல் வந்துள்ளது. உதிரி பாகங்களை இறக்குமதி செய்து இங்கு அசெம்பிள் செய்து விற்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது 1043 சி.சி. திறன்கொண்டது. நான்கு சிலிண்டர் என்ஜினுடன் 120 ஹெச்.பி. திறன் மற்றும் 102 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையுடன் இது களமிறக்கப்படுகிறது. முந்தைய மாடல்களைக் காட்டிலும் இதன் முன்பகுதி மிகவும் கூர்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை நின்ஜா மோட்டார் சைக்கிளுக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து அதே போன்ற வடிவமைப்பு இதிலும் இடம்பெற்றுள்ளது. எல்.இ.டி. முகப்பு விளக்கு, அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான விண்ட் ஸ்கிரீன், டிஜிட்டல் மீட்டர் ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும்.
இதில் கவாஸகி நிறுவனத்தின் டிராக்ஷன் கண்ட்ரோல் வசதி, குரூயிஸ் கண்ட்ரோல் வசதி ஆகியன இதில் உள்ளன. முன்புற மற்றும் பின்புற சஸ்பென்ஷனிலும் பெரும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் இருக்கை உயரம் 790 மி.மீ. ஆகவும், பெட்ரோல் டேங்க் 21 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முத்து போன்ற வெள்ளை நிறத்திலும், மெட்டாலிக் ஸ்பார்க் கருப்பு நிறத்திலும் இது வந்துள்ளது. அடுத்த மாதம் முதல் இது டெலிவரி செய்யப்படும் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது. சாகச பயணங்களை விரும்பும் இளைஞர்களுக்கு கவாஸகி பிராண்டின் புதிய வரவாக இது நிச்சயம் இருக்கும்.
Related Tags :
Next Story