எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–1, பிளஸ்–2 பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–1, பிளஸ்–2 பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 20 Feb 2019 11:15 PM GMT (Updated: 20 Feb 2019 1:34 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–1, பிளஸ்–2 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நடைபெற்றது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வு வருகிற மார்ச் 1–ந் தேதி முதல் 19–ந் தேதி வரை 169 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 41,422 மாணவ–மாணவிகள் எழுதுகின்றனர். பிளஸ்–1 பொதுத்தேர்வு மார்ச் 6–ந் தேதி முதல் 22–ந் தேதி வரை 169 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 40,371 மாணவ–மாணவிகள் எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மார்ச் 14–ந் தேதி முதல் 29–ந் தேதி வரை 227 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 51,354 மாணவ–மாணவிகள் எழுதுகின்றனர்.

இந்த பொதுத்தேர்வுகள் வேலூர் மாவட்டத்தில் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துறைவாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ராமன் பேசியதாவது:–

குறிப்பிட்ட பள்ளிகளில் வைக்கப்பட உள்ள வினாத்தாள்களை கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட அறையில் வைக்க வேண்டும். இங்கு 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவலர் பாதுகாப்பு அளிக்க வேண்டும். தேர்வு நாள் அன்று வினாத்தாள்கள் எடுத்து செல்லும் வாகனத்திற்கு ஆயுதம் ஏங்கிய காவலர் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாக தேர்வு மையங்களுக்கு போலீசார் வருகை தந்து தேர்வு முடியும் வரை தேர்வு மையங்களில் வெளிநபர்கள் வருவதை தவிர்க்கவும் மற்றும் தேர்வுமைய வளாகத்தில் பிரச்சினை இல்லாத சூழ்நிலை நிலவுவதை உறுதி செய்து பாதுகாப்பு வழங்க வேண்டும். விடைத்தாள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

புகார்கள் பெறப்படும் தேர்வு மையங்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமாக உள்ள தேர்வு மையங்கள் என்று சுட்டிக்காட்டப்படும் மையங்களுக்கு வருவாய்த்துறையினர் திடீரென ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

பொதுத் தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு நேரங்களில் தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். விடைத்தாள்கள் மதிப்பீட்டு மையங்களாக உள்ள இடங்களில் மதிப்பீட்டு பணி நடைபெறும் நாட்களில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்.

பொதுத் தேர்வு நடைபெறும் நாட்களில் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல ஏதுவாக போக்குவரத்து வசதி உறுதி செய்ய வேண்டும். விடைத்தாள் மையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு பணி முடியும் வரை தீயணைப்பு கருவிகளுடன் ஒருவர் பாதுகாப்பிற்காக இருக்க வேண்டும்.

அரசுத் தேர்வுத்துறை மூலம் பெறப்படும் வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை பள்ளிகல்வித்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். தேர்வு பணிகளுக்கு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காதவாறு செயல்படுபவர்களை நியமனம் செய்ய வேண்டும். பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து தேர்வு சார்ந்து அவ்வப்போது பெறப்படும் புகார்கள் மீது அவற்றின் உண்மைத் தன்மை நேரடி ஆய்வின் மூலம் கண்காணித்து புகார்கள் ஏதுமின்றி தேர்வுகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story