தமிழகத்தில் 28,300 மாணவர்களுக்கு தொழில்நுட்ப திறன் வளர்ப்பு பயிற்சி அமைச்சர் கே.பிஅன்பழகன் பேச்சு
தமிழகத்தில் 28, 300 மாணவர்களுக்கு தொழில்நுட்ப திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று பாலக்கோட்டில் நடந்த சான்றிதழ் வழங்கும் விழாவில் அமைச்சர் கே.பிஅன்பழகன் பேசினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 16 பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு தொழில்நுட்ப திறனை வளர்ப்பதற்கான பயிற்சி முகாம் பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமின் நிறைவு விழாவுக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) செண்பகராஜன் முன்னிலை வகித்தார். விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 150 மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் அமைச்சர் பேசியதாவது:–
திறன்சார் பயிற்சிகளை ஊக்குவித்து அதன்மூலம் மாணவர்களின் திறன்களை கண்டறிய செய்து தொழில்துறைக்கு ஏற்ப அந்த திறனை மேம்படுத்துவதே இந்த பயிற்சி முகாமின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் கிராமப்புற மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறவும், சிறந்த தொழில் முனைவோராக உருவெடுக்கவும் இந்த பயிற்சி திட்டம் மிகவும் உதவுகிறது.
மனிதவள மேலாளர்கள், பயிற்றுனர்கள், வங்கியாளர்கள், மாவட்ட தொழில் மைய அலுவலர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் தொழில் தொடங்க அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள், மானிய திட்டங்கள் குறித்தும் விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் இதுவரை 91 மையங்களில் ரூ.97 லட்சம் செலவில் 28,300 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை வேலைக்கு தயார்படுத்துவதோடு அவர்களை ஆற்றல் மிக்கவர்களாகவும், உலக சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய திறமை படைத்தவர்களாகவும் உருவாக்க ஆசிரியர்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.
இந்த விழாவில் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் தொ.மு.நாகராஜன், முன்னாள் தலைவர் கே.வி.அரங்கநாதன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், கூட்டுறவு சங்க தலைவர் வீரமணி, பேரூராட்சி துணைத்தலைவர் சங்கர், கல்லூரி துணை முதல்வர் ரவி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.