கூடலூர் பகுதியில் புளி விளைச்சல் அமோகம்


கூடலூர் பகுதியில் புளி விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 21 Feb 2019 4:15 AM IST (Updated: 20 Feb 2019 10:21 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் புளி விளைச்சல் அமோகமாக உள்ளது.

கூடலூர்,

கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் புளியமரங்களை வைத்து விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். இங்கு விளையும் புளி, அதிக புளிப்பு தன்மை கொண்டதாக உள்ளது. நீண்ட நாட்கள் வரை புளி கெட்டுப்போகாமல் இருக்கும். இதுபோன்ற காரணத்தினால் கூடலூர் பகுதியில் விளையும் புளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடலூர் பகுதியில் புளி விளைச்சல் அமோகமாக உள்ளது. தற்போது கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் புளி பறிக்கும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் புளியை தரம் பிரிக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். புளியில் இருந்து தோடுகளை நீக்கும் பணி முழுவீச்சாக நடந்து வருகிறது.

மேலும் புளியை வாங்குவதற்காக, தேனி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கூடலூருக்கு வருகை தருகின்றனர். விளைச்சல் அதிகரித்த போதிலும், விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு 100 கிலோ தோடு நீக்கிய புளி, ரூ.6 ஆயிரம் முதல் ரூ.6,500 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 100 கிலோ தோடு நீக்கிய புளி ரூ.3 ஆயிரத்து 300 முதல் ரூ.3 ஆயிரத்து 500 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, தேனி மாவட்ட வியாபாரிகள் சிலர், வெளிமாவட்டங்களில் இருந்து வருகிற வியாபாரிகளை தடுத்து நிறுத்தி அவர்களே நேரடியாக புளியை விற்பனை செய்து வருகின்றனர். வெளி மாவட்ட வியாபாரிகள் வராததால் உள்ளூர் வியாபாரிகளுக்கு புளியை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே விலைவீழ்ச்சியை தடுக்க அரசே புளியை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் கூடலூர் பகுதியில் புளியை சேகரித்து வைப்பதற்கு குளிர்பதன குடோன்கள் அமைக்க வேண்டும். இதுமட்டுமின்றி ரேஷன்கடைகள் மூலம் புளியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story