நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் அமைச்சர் துரைக்கண்ணு பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் அமைச்சர் துரைக்கண்ணு பேச்சு
x
தினத்தந்தி 21 Feb 2019 4:30 AM IST (Updated: 20 Feb 2019 10:23 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.

கும்பகோணம்,

கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் கோபிநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ரத்தினசாமி, சூரியநாராயணன், அசோக்குமார், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ராம.ராமநாதன் வரவேற்றார். பாரதிமோகன் எம்.பி., கோவிந்தராஜ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுப்ரமணியன், தவமணி, இளமதிசுப்ரமணியன், ராம்குமார், கைத்தறி பிரிவு செயலாளர் லெனின், மாவட்ட பிரிவு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–


நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து அ.தி.மு.க. போட்டியிடுகிறது. இந்த கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். இந்த கூட்டணியை பார்த்து எல்லா கட்சிகளும் மிரண்டு போய் உள்ளன. நமக்கு ஒரே எதிரி ஸ்டாலின்தான். அவர் தற்போது மரத்தடியில் உட்கார்ந்து ஜோசியம் பார்த்து வருகிறார். டி.டி.வி. தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளார். அவரை நம்பி சென்றவர்கள் என்ன செய்வது என தெரியாமல் உள்ளனர்.


கருவறை முதல் கல்லறை வரை நலத்திட்டங்களை வகுத்தவர் ஜெயலலிதா. அவர் வழியில் வந்த எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா வழியை பின்பற்றி ஆட்சி நடத்தி வருகிறார். தற்போது 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்க உள்ளார். அந்த பணத்தை பொதுமக்களுக்கு சரியாக கொண்டு செல்ல வேண்டும். இந்த ஆட்சி ஜெயலலிதா கூறியபடி அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எங்களது ஆட்சியின் சாதனைகளை கூறி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குசேகரிப்போம். 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். இவ்வாறு அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.

முடிவில் ஒன்றிய செயலாளர் சோழபுரம் கா.அறிவழகன் நன்றி கூறினார்.

Next Story