நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி? டி.டி.வி.தினகரன் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி? டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 21 Feb 2019 4:15 AM IST (Updated: 20 Feb 2019 10:39 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி? என்பது குறித்து சேலத்தில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

சேலம், 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடி நடவடிக்கை தவறான உதாரணம். அவரது தவறான நடவடிக்கை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை செயல்படவிடாமல் தடுக்கக்கூடாது. கவர்னர் ஒரு மாநிலத்தின் திட்டங்களுக்கு ஆதரவு தர வேண்டுமே தவிர, அரசை செயல்படவிடாமல் தடுப்பது தவறு.

இந்த தேர்தலுடன் முடிய போகிற அ.தி.மு.க.வுடன் சிலர் கூட்டணி வைத்துள்ளனர். அதாவது, அ.தி.மு.க.வுடன் பா.ம.க, பா.ஜனதா கட்சிகள் கூட்டணி வைத்திருப்பது அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கயிற்றை கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் குதிப்பதற்கு சமம்.

கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மடியில் கனம் உள்ளது. இதனால் அவர் பயப்படுகிறார். உண்மை எல்லாம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.

இதைத்தொடர்ந்து அ.ம.மு.க.கட்சியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆட்களே இல்லை என்று அமைச்சர் உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார் என்ற கேள்விக்கு பதில் அளித்த டி.டி.வி.தினகரன், ஆம் எங்கள் கட்சியில் ஆள் இல்லை. அதனால் அமைச்சர் உதயகுமாரையே நிற்க வைக்க அழைப்பு விடுக்கிறேன் என கிண்டலாக கூறினார்.


Next Story