2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத்துறை உத்தரவு


2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத்துறை உத்தரவு
x
தினத்தந்தி 20 Feb 2019 11:15 PM GMT (Updated: 20 Feb 2019 5:11 PM GMT)

2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியதாக கூறப்பட்ட புகார் தொடர்பாக விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய கோவை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவை,

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் பெண் குழந்தைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் ஏற்றப்பட்டதாக நேற்று முன்தினம் கூறப்பட்டது. இதையடுத்து தங்களுடைய குழந்தைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஏற்றப்பட்ட ரத்தத்தின் மூலம் தான் எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று பெற்றோர் பரபரப்பு புகார் தெரிவித்தனர். இது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை கோவை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்தனர். அந்த பெண் குழந்தைக்கு வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தபோது எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து ஒரு வாரத்துக்குள் விசாரித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கோவை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த பரிசோதனை நிலைய அதிகாரிகள், நர்சுகள் உள்பட பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இதுகுறித்து மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறியதாவது:- எடை குறைவான குழந்தைக்கு அடிக்கடி ரத்தம் ஏற்ற முடியாது. ஒருமுறை ரத்தம் ஏற்றினால் அது 6 மாதம் வரை தாக்குப்பிடிக்கும். எனவே ரத்தம் ஏற்றப்பட்ட ஒரு இடத்தில் தான் எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டு இருக்க வேண்டும். அதுகுறித்து முழுமையாக விசாரித்தால் தான் உண்மை வெளியே வரும். மேலும் ஊசி மூலம் எச்.ஐ.வி. பரவாது. எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றவருக்கு பயன்படுத்தினால் தான் ஊசி மூலம் எச்.ஐ.வி. தொற்றும். ஆனால் அரசு ஆஸ்பத்திரி உள்பட அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் ஊசி தான் உபயோகப்படுத்தப்படுகிறது என்பது நோயாளிகள் உள்பட அனைவருக்கும் தெரியும். எனவே ஊசி மூலம் எச்.ஐ.வி. பரவும் என்பது நம்பும் படியாக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story