பழனி நகராட்சியில் வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு ‘சீல்’ வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
பழனி நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பழனி,
பழனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடு, கடைகளில் குடிநீர் வரி, தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. மேலும் நகராட்சிக்கு சொந்தமாக பஸ்நிலையம், அடிவாரம், காந்தி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் 271 கடைகள் உள்ளன. இங்கு மாதந்தோறும் வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வரி, தொழில்வரி, வாடகை ஆகியவை முறையாக செலுத்தப்படாததால் நகராட்சிக்கு பல கோடி ரூபாய் நிலுவை உள்ளது.
இந்நிலையில் வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பை துண்டிக்கவும், கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கவும் ஆணையர் நாராயணன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நகராட்சி வருவாய் அலுவலர் நாகநாதன் தலைமையிலான அதிகாரிகள் பஸ்நிலையத்தில் வாடகை செலுத்தாமல் இயங்கி வந்த கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இதேபோல் தண்ணீர் வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் கூறுகையில், கடை வாடகை, தொழில் வரி பாக்கியாக ரூ.6 கோடியே 14 லட்சம் உள்ளது. இதில் அதிகபட்சமாக தண்ணீர் வரி ரூ.2 கோடி, தொழில்வரி ரூ.89 லட்சம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட குடியிருப்புவாசிகள், கடைக் காரர்கள் பாக்கித்தொகையை செலுத்தும்படி 3 மாதங்களுக்கு முன்பே ஒலிபெருக்கி மூலம் வீதி, வீதியாக அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது.
ஆனாலும் அவர்கள் காலம் தாழ்த்தி வந்ததால், குடியிருப்புகளின் குடிநீர் இணைப்பு மற்றும் கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுமார் 135 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் வாடகை செலுத்தாத 20 கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. இதில் சில கடைக் காரர்கள் அதிகாரிகளிடம் உடனடியாக பணம் செலுத்தியதை தொடர்ந்து, அவர்களின் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படவில்லை. இந்த நடவடிக்கை தொடரும் என்றும், அதற்குள் வரி பாக்கி வைத்துள்ளவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story