தூத்துக்குடி, கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்
தூத்துக்குடி, கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி,
பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 15 சதவீதம் ஊதிய நிர்ணய பலனுடன் 3-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். 1-1-2017 முதல் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். 2-வது ஊதிய மாற்றக்குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நில மேலாண்மை கொள்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரங்களை பராமரிக்கும் பணியை தனியாரிடம் வழங்க கூடாது என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கடந்த 18-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் சுமார் 350 ஊழியர்கள் பங்கேற்று உள்ளனர். மாவட்டத்தில் உள்ள செல்போன் கோபுரங்களில் சாத்தான்குளம் பகுதியில் 9 செல்போன் கோபுரங்கள் பராமரிப்பு இல்லாததால் செயல்படவில்லை. இதே போன்று பிராட்பேண்ட் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பில் கட்டணம் வசூல் மையங்கள் முழுமையாக மூடப்பட்டு இருந்ததால் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனைத்து பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அலுவலர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலகண்ணன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கூட்டமைப்பு தலைவர் முருகபெருமாள், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயமுருகன், சஞ்சார் நிகாம் அதிகாரிகள் சங்க மாவட்ட தலைவர் அந்தோணி, அகில இந்திய பி.எஸ்.என்.எல். அலுவலர் சங்க செயலாளர் சொர்ணராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
கோவில்பட்டியிலும் 3-வது நாளாக வேலை நிறுத்தம் நீடித்தது. பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஊழியர்கள், அதிகாரிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். இதேபோன்று திருச்செந்தூரிலும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story