பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகளை மார்ச் மாதத்துக்குள் முடிக்க உத்தரவு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தகவல்


பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகளை மார்ச் மாதத்துக்குள் முடிக்க உத்தரவு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தகவல்
x
தினத்தந்தி 21 Feb 2019 4:45 AM IST (Updated: 20 Feb 2019 11:21 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப கட்டுமான பணிகளை வருகிற மார்ச் மாதம் இறுதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்று பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ரபீந்தர் தெரிவித்தார்.

திருச்செந்தூர், 

பத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தூத்துக்குடியில் கடந்த 22-11-2017 அன்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி, திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் சிவந்தி அகாடமி வளாகத்தில் 60 சென்ட் நிலத்தில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவ சிலையுடன் மணிமண்டபம் அமைக்கும் பணி கடந்த 26-10-2018 அன்று தொடங்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தில் பூங்கா, நூலகம் மற்றும் மணிமண்டபத்துக்கு வருகின்ற பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை மதுரை மண்டல தலைமை பொறியாளர் (கட்டுமானம், பராமரிப்பு) ரபீந்தர் நேற்று காலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 30 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அடுத்த மாதம் (மார்ச்) இறுதிக்குள் அனைத்து பணிகளையும் துரிதமாக முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது’ என்றார்.

பொதுப்பணித்துறை நெல்லை கோட்ட கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், தூத்துக்குடி செயற்பொறியாளர் சுகுமார், திருச்செந்தூர் இளநிலை பொறியாளர் கணேசன், ஒப்பந்ததாரர் வர்கீஸ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story