மன்னார்குடியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தல்


மன்னார்குடியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Feb 2019 10:45 PM GMT (Updated: 20 Feb 2019 6:46 PM GMT)

மன்னார்குடியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தி உள்ளது.

சுந்தரக்கோட்டை,

மன்னார்குடியில் திறன் அறியும் பயிற்சி மையம் திறந்திட வேண்டும் என்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மன்னார்குடி நகர பேரவை கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் சார்லஸ் விக்டர் தலைமை தாங்கினார். நகரக்குழு உறுப்பினர் ரஞ்சித் வரவேற்றார். கூட்டத்தை தொடங்கி வைத்து அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினர் துரை அருள்ராஜன் பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் கலைச்செல்வன், துணை செயலாளர்கள் தனிக்கொடி, பக்கிரிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 18 பேர் கொண்ட நகரக்குழு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

தொழில் வளம் பெருகிடவும், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் மன்னார்குடியில் புதிய தொழிற் பேட்டை அமைக்க வேண்டும். மன்னார்குடி சுற்று வட்டார பகுதிகளில் வசித்து வரும் இளைஞர்கள் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான திறன் அறியும் பயிற்சி மையம் தனியார் மூலம் வெளி மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. இதில் தனியார் நிறுவனங்கள் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு பயிற்சி வழங்குகின்றன. பொருளாதாரத்தில் பின் தங்கிய இளைஞர்கள் இதில் பயன்பெற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே குறைந்த செலவில் தமிழக அரசே, திறன் அறியும் பயிற்சி நிறுவனத்தை தொடங்கி நடத்த வேண்டும்.

மன்னார்குடி பஸ் நிலையத்தில் இடவசதி இல்லாததால் பஸ்கள் நிறுத்த முடியாமல் உள்ளது. இதனால் புதிய இடத்தை தேர்வு செய்து பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.

மன்னார்குடி கர்த்தநாதர் பாலம் பிருந்தாவன் நகரையும், மன்னார்குடி புறவழிச் சாலையையும் இணைக்கும் பழைய இரும்பு நடைப்பாலம் பல ஆண்டு காலமாக மிக மோசமாக இடிந்து விழும் நிலையில் உள்ளது, இதனை முழுமையாக அகற்றிவிட்டு புறவழிச்சாலையையும் பிருந்தாவன் நகரையும் இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story