முகநூல் மூலம் மலர்ந்த காதல்: திருமணம் செய்ய காதலி மறுத்ததால் டிரைவர் விஷம்குடித்து தற்கொலை கடத்தூர் அருகே பரிதாபம்


முகநூல் மூலம் மலர்ந்த காதல்: திருமணம் செய்ய காதலி மறுத்ததால் டிரைவர் விஷம்குடித்து தற்கொலை கடத்தூர் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 21 Feb 2019 3:30 AM IST (Updated: 21 Feb 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

முகநூல் மூலம் டிரைவருக்கும், இளம்பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. அதன்பின்னர் காதலி திருமணம் செய்ய மறுத்ததால் டிரைவர் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பொம்மிடி,

கடத்தூர் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள லிங்கநாயக்கனஅள்ளியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). இவருடைய மகன் சக்திவேல் (19). இவர் டிரைவராக வேலைபார்த்து வந்தார். சக்திவேலுக்கு செல்போனில் முகநூல் (பேஸ்புக்) மூலம் புதுச்சேரியை சேர்ந்த ஒரு இளம்பெண் பழக்கம் ஆனார். இருவரும் அடிக்கடி பேசி பழகினர். நாளடைவில் அந்த பெண் மீது சக்திவேலுக்கு காதல் மலர்ந்தது.

இதன்பின்னர் சக்திவேல் அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அந்த பெண் மறுத்து விட்டார்.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சக்திவேல் கடந்த 12-ந்தேதி வீட்டில் இருந்தபோது விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதனால் வலிதாங்க முடியாமல் அலறிய அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று சக்திவேல் இறந்தார்.

இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முகநூல் மூலம் மலர்ந்த காதலையடுத்து டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story