விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 20 Feb 2019 10:30 PM GMT (Updated: 20 Feb 2019 8:30 PM GMT)

வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்லாவி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே தண்ணீர்பந்தல் மற்றும் மண்ணாடிப்பட்டி காப்புக்காடு உள்ளது. இந்த காப்புக்காட்டில் மான், கரடி, காட்டுப்பன்றி, குரங்கு, முயல் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி காணப்படுகிறது.

வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள், குட்டைகளில் தண்ணீர் இன்றி காணப்படுகின்றன. இதன் காரணமாக வனவிலங்குகளான மான், காட்டுப்பன்றி, கரடி உள்ளிட்டவைகள் தண்ணீர் தேடி அருகில் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. மேலும் இவ்வாறு வரும் வனவிலங்குகள் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கி காயம் அடைகின்றன. சில நேரங்களில் அவைகள் விபத்தில் சிக்கி செத்தும் போகின்றன.

மேலும் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் மான்களை சமூக விரோதிகள் சிலர் வேட்டையாடுகின்றனர். எனவே, வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவதை தடுக்க வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும், அதில் அவ்வப்போது தண்ணீர் நிரப்ப வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story