தளி அருகே வடமாநில வாலிபர் குத்திக்கொலை
தளி அருகே வடமாநில வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
தேன்கனிக்கோட்டை,
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சபீத்பசுமாதிரி (வயது 26), பிரதீப்போரா (32). இவருடைய சகோதரியை தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சபீத்பசுமாதிரி திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் சபீத்பசுமாதிரி, பிரதீப்போரா ஆகிய இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே கோட்டரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் தங்கி தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். தனது தங்கையை அசாமில் விட்டு வந்தது தொடர்பாக பிரதீப்போரா, சபீத்பசுமாதிரியிடம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்கு இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த பிரதீப்போரா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து சபீத்பசுமாதிரியை சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் வலியால் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து ஓடி வந்தனர். இதைப் பார்த்த பிரதீப்போரா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதற்கிடையே படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சபீத்பசுமாதிரியை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு சபீத்பசுமாதிரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பிரதீப்போராவை வலைவீசி தேடி வருகின்றனர். வடமாநில வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story