கும்பகோணத்தில் நாயின் கழுத்தில் மாட்டிய பலகை அகற்றம் காப்பகத்தில் பராமரிக்க நடவடிக்கை


கும்பகோணத்தில் நாயின் கழுத்தில் மாட்டிய பலகை அகற்றம் காப்பகத்தில் பராமரிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Feb 2019 10:45 PM GMT (Updated: 20 Feb 2019 7:18 PM GMT)

கும்பகோணத்தில் நாயின் கழுத்தில் மாட்டிய பலகை அகற்றப்பட்டது. அந்த நாயை காப்பகத்தில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சக்கரபாணி கோவில் தெரு அருகே உள்ள பி.சண்முகம் தெரு மற்றும் சுற்றி உள்ள தெருக்களில் கடந்த சில நாட்களாக ஒரு நாய் கழுத்தில் மாட்டிக்கொண்ட மரப்பலகையுடன் தள்ளாடியபடி சுற்றித்திரிந்தது. பலகை மாட்டி இருந்ததால் அந்த நாயால் இயல்பாக நடமாட முடியவில்லை. சாப்பிடுவதற்கு கூட முடியவில்லை. இதனால் அந்த நாய் நாளுக்கு நாள் தளர்வடைந்து வந்தது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் நாயின் கழுத்தில் இருந்து பலகையை அகற்ற முயன்றனர்.

அப்போது நாய் கடிப்பதற்கு ஆவேசமாக பாய்ந்ததால் முயற்சி கைவிடப்பட்டது. வாய் இல்லா ஜீவனின் பரிதாப நிலை குறித்த செய்தி “தினத்தந்தி” நாளிதழில் நேற்று வெளியானது. இதன் எதிரொலியாக கும்பகோணம் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி நாயை பிடித்து அதன் கழுத்தில் உள்ள பலகையை அகற்ற உத்தர விட்டார்.

இதையடுத்து நகராட்சி ஆய்வாளர் டேவிட், விலங்குகள் நல அமைப்பின் செயலாளர் அன்பழகன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் நேற்று பி.சண்முகம் தெருவில் சுற்றித்திரிந்த அந்த நாயை பிடித்து, அதன் கழுத்தில் மாட்டிய பலகையை லாவகமாக அகற்றினர்.

பின்னர் அந்த நாயை காப்பகத்தில் வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கும்பகோணம் அருகே கரிக்குளம் கிராமத்தில் உள்ள நாய்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. கடந்த பல நாட்களாக உணவு சாப்பிட முடியாமல் அவதிப்பட்ட அந்த நாய்க்கு, காப்பகத்தில் ஊட்டச்சத்து பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாயின் கழுத்தில் மரப்பலகை எப்படி மாட்டியது? என்பது புரியாத புதிராக உள்ளது. பலகையை வேண்டுமென்றே நாய்க்கு மாட்டி விட்டார்களா? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story