மின்வழித்தட கம்பி துண்டிப்பால் நடுவழியில் நின்ற கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் பள்ளிபாளையம் அருகே பயணிகள் பரிதவிப்பு


மின்வழித்தட கம்பி துண்டிப்பால் நடுவழியில் நின்ற கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் பள்ளிபாளையம் அருகே பயணிகள் பரிதவிப்பு
x
தினத்தந்தி 21 Feb 2019 3:45 AM IST (Updated: 21 Feb 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் அருகே ரெயில் மின்வழித்தட கம்பியில் திடீரென துண்டிப்பு ஏற்பட்டதால், கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றது. பின்னர் இந்த பழுது சீரமைக்கப்பட்டு ரெயில் அங்கிருந்து தாமதமாக புறப்பட்டு சென்றது.

பள்ளிபாளையம், 

கோவையில் இருந்து சென்னைக்கு நேற்று பிற்பகல் 3 மணியளவில் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. மின்வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த ரெயில் ஈரோட்டுக்கு மாலை 4.45 மணியளவில் வந்து சேர்ந்தது. பின்னர் அங்கிருந்து 5 மணிக்கு புறப்பட்ட அந்த ரெயில், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே அலமேடு என்ற இடத்தில் 5.15 மணியளவில் வந்த போது திடீரென நின்று விட்டது.

உடனே என்ஜின் டிரைவர் மற்றும் ஊழியர்கள், ரெயிலில் இருந்து இறங்கி பார்த்தனர். அப்போது என்ஜினுக்கு மேல் இருந்த மின் வழித்தட கம்பி துண்டாகி இருப்பது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக ஈரோட்டில் உள்ள ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து ரெயில் மின்பாதைக்கான மின்சார இணைப்பை துண்டித்தனர். பின்னர் ரெயிலில் மின்வழித்தட கம்பி பழுதை சீரமைத்தனர். ரெயில் நடுவழியில் நின்ற சம்பவத்தால் அதில் இருந்த பயணிகள் பரிதவித்தனர். குழந்தைகளுடன் வந்த பயணிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

அதே நேரத்தில் சீரமைப்பு பணி சுமார் 1½ மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. இதையடுத்து 6.45 மணியளவில் அங்கிருந்து ரெயில் புறப்பட்டு சேலம் நோக்கி சென்றது.

வழக்கமாக மாலை 5.27 மணிக்கு சேலத்திற்கு வரும் அந்த ரெயில் நேற்று இரவு 8.10 மணியளவில் வந்தது. இதன் காரணமாக ரெயில் சுமார் 2 மணி நேரம் 40 நிமிடம் தாமதமாக சேலத்திற்கு வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கிருந்து சென்னைக்கு அந்த ரெயில் புறப்பட்டு சென்றது.

Next Story