விதிமுறைகளை மீறி டிஜிட்டல் பேனர் வைத்தால் ஓராண்டு சிறை கலெக்டர் ஆசியா மரியம் எச்சரிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி டிஜிட்டல் பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் ஆசியா மரியம் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
நாமக்கல்,
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் வைப்பதற்கு சென்னை ஐகோர்ட்டு வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரை தடை அமலில் உள்ளது. மேலும் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் வைப்பதற்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளிக்கும் பட்சத்தில், விண்ணப்பதாரர்கள் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் வைக்க உத்தேசித்துள்ள தேதிக்கு 2 நாட்களுக்கு முன்பாக தங்களது விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் வைக்கப்படும் இடம் தனியாருக்கு சொந்தமானதாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பட்டாதாரரிடமும், அரசுக்கு சொந்தமான இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடமும் தடையின்மை சான்று பெற்று விண்ணப்பத்துடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக காவல் துறையினரிடமும் தடையின்மை சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இத்துடன் அனுமதி கோரப்படும் இடத்தின் கூட்டு புல வரைபடத்தினையும் சமர்ப்பிக்க வேண்டும்.
நடைபாதை இல்லாத சாலைகளில், சாலையின் விளிம்பில் இருந்து 10 அடி இடைவெளிவிட்டு டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் நிறுவப்பட வேண்டும். எக்காரணத்தை கொண்டும் சாலையின் குறுக்கில் நிறுவப்படக்கூடாது. டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகளுக்கு நடுவே 10 மீட்டருக்கு குறையாத சமமான இடைவெளி இருக்க வேண்டும்.
எக்காரணத்தை கொண்டும் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், சாலை ஓரங்கள், சாலை சந்திப்புகள், நினைவுச்சின்னங்கள், உருவச்சிலைகள் மற்றும் சுற்றுலா தலங்கள் ஆகியவற்றில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் வைக்ககூடாது. இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் உரிய அனுமதி பெற்று 6 நாட்களுக்கு மட்டுமே நிறுவப்பட வேண்டும். டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகளில் கீழே மாவட்ட கலெக்டரின் அனுமதி எண், தேதி, அனுமதி காலம், அனுமதிக்கப்பட்ட அளவு, அச்சகத்தின் பெயர் ஆகியவை தவறாமல் அச்சடிக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த விவரங்கள் இடம்பெறாத டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் முறையற்றவைகளாக கருதப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story