நாமக்கல்லில் போதைப்பொருள், சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு


நாமக்கல்லில் போதைப்பொருள், சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 20 Feb 2019 9:45 PM GMT (Updated: 2019-02-21T00:58:51+05:30)

நாமக்கல்லில் நேற்று போதைப்பொருள் மற்றும் சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் மதுப்பழக்கம், போதைப்பொருள் மற்றும் சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. நாமக் கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இருந்து இந்த ஊர்வலத்தை கலெக்டர் ஆசியா மரியம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் சாராயம் அருந்துவதால் கண் பார்வை பாதிக்கப்படும், உயிரிழப்பு ஏற்படும், போதையில் வாகனம் ஓட்டக்கூடாது, சாராயம் ஓர் உயிர்க்கொல்லி, சாராயத்தை ஒழிப்பதே நாட்டின் வளர்ச்சி என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை ஏந்தி சென்றனர்.

இந்த ஊர்வலம் மோகனூர் சாலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை, டாக்டர் சங்கரன் சாலை வழியாக மீண்டும் அரசு ஆஸ்பத்திரியை வந்தடைந்தது. இதில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், உதவி ஆணையர் (கலால்) இலாஹிஜான், நாமக்கல் தாசில்தார் செந்தில்குமார், செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ் கண்ணன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story