நாமக்கல், பரமத்திவேலூர், திம்மராவுத்தம்பட்டியில் கல்விச்சீர் வழங்கும் விழா
நாமக்கல், பரமத்தி வேலூர், திம்மராவுத்தம்பட்டியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது.
பரமத்திவேலூர்,
நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதையொட்டி நாமக்கல் உழவர்சந்தை அருகில் இருந்து கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமையில் ஊர்வலமாக வந்த மாணவ, மாணவிகள் மற்றும் அவர்தம் பெற்றோர் பள்ளியின் தலைமை ஆசிரியை மரகதத்திடம் சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
எவர்சில்வர் பாத்திரம், குடங்கள், எழுது பொருட்கள், மரக்கன்றுகள் என பல்வேறு வகையான பொருட்கள் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா, பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் ரவி, பள்ளி கட்டிடக்குழு தலைவர் உழவன் தங்கவேல், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் நரசிம்மன், கமால்பாஷா, ரம்யா சேகர், திருக்குறள் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூரில் அரசு உதவிபெறும் கந்தசாமி கண்டர் தொடக்கப்பள்ளியில் பெற்றோர்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பெற்றோர்கள் சீர்வரிசைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் வழங்கினர். பள்ளிக்கு சீர்வரிசை கொண்டுவந்த பெற்றோர்களுக்கு பள்ளியின் சார்பில் ஆசிரியைகள் சந்தனம் மற்றும் குங்குமம் வழங்கி வரவேற்றனர்.
கல்வி சீர்வரிசையாக இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் டி.வி, நாற்காலிகள், புத்தகங்கள் வைக்க அலமாரிகள், தண்ணீர் குடங்கள், டம்ளர் கள், நோட்டு, புத்தகங்கள், மரக்கன்றுகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை வழங்கினர். இந்த விழாவில் பள்ளியின் செயலாளர் ஆறுமுகம், தலைமை ஆசிரியை மணிமேகலை, ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எலச்சிபாளையம் ஒன்றியம் திம்மராவுத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர்கள் பாகீரதி, ராஜவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி தலைமை ஆசிரியை சித்ராம்பாள் வரவேற்றார். பள்ளிக்கு பெற்றோர்கள் சார்பில் மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க நடனம் ஆடியபடி நாற்காலி, மின்விசிறி, பென்சில், பேனா, நோட்டு புத்தகங்கள் மற்றும் தலைவர்களின் படங்கள் உள்ளிட்ட கல்விச்சீர் எடுத்துவரப்பட்டு வழங்கப்பட்டன. அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கலைச்செல்வி, ஆசிரிய பயிற்றுனர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story